அம்னோவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, ஸாகிட் கூறுகிறார்

 

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அம்னோ மற்றும் அம்னோ சிலாங்கூர் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது என்று அம்னோவின் இடைக்காலத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஜோகூர் அம்னோவின் வங்கிக் கணக்கும் முடக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியானதாகி விட்டது என்று அவர் ஜோகூரில் இன்று கூறியதாக ஸ்டார்ஒன்லைன் செய்தி கூறுகிறது.

அம்னோ தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் மற்றும் உச்சமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் ஏதும் இல்லை, ஏனென்றால் நாம் இப்போது ஆட்சியில் இல்லை என்று ஸாகிட் மேலும் கூறினார்.

இதில் முன்னாள் மந்திரி பெசாரும் அடங்குவார் என்று உத்துசான் ஓன்லைன் கூறுகிறது.

வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது தற்போது அம்னோ முன்னாள் தலைவர் நஜிப் மீது நடத்தப்பட்டு வரும் விசாரனைகளுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

நேற்று மலேசியாகினியுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நேர்காணலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி வழங்குவதற்காக ரொக்கப் பணம் வைத்திருப்பது அவசியமாகும் என்று நஜிப் ரசாக் கூறியிருந்தார்.