‘ஞாயிறு’ நக்கீரன், அம்னோவின் பண்பட்ட தலைவர்களாக இப்பொழுது இருவர் வலம் வருகின்றனர். இளைஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பிற்குப் பின் தேசியத் தலைவர் பொறுப்பிற்கு ‘ஒரேத் தாவாக’ தாவ எண்ணம் கொண்டிருக்கும் கைரி ஜமாலுடினும் துங்கு இரசாலியும்தான் அந்த இருவர்.
அம்னோ தற்பொழுது அடைந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் உண்மையை உணர்ந்து புதுமையாக சிந்திக்கும் இளம் தலைவராக கைரி திகழும் அதேவேளையில் நிறைவான பட்டறிவும் நிதானமான போக்கும் கொண்ட மூத்த தலைவராக துங்கும் இரசாலி வலம் வருகிறார். இவ்விருவரும் அக்கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பிற்காக மல்லுக்கு நின்றாலும் அவர்களின் போக்கும் சிந்தனையும் பொருள் பொதிந்தாக உள்ளன.
அம்னோ-வை எப்படியும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் ஊக்கமும் இவர்கள் இருவரிடமும் நிறைந்திருக்கும் அதேவேளை, இவர்கள் இருவருடன் தேசியத் தலைவர் பொறுப்பிற்காக போட்டி இடுபவர்களில் இன்னொருவரான டத்தோஸ்ரீ சாகிட் அமிடி, குறுக்கு வழியில் சிந்திக்கிறார்.
புத்ராஜெயா ஆட்சிக் கட்டிலில் அம்னோ மீண்டும் அமர, அடுத்தப் பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டியதில்லை; அதற்கு இடையிலேயே நம்பிக்கைக் கூட்டணி சிதைந்து விடும்; அதனால் 2023-க்கு முன்பே அம்னோ மத்திய ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று சொல்லி இருக்கிறார்.
அத்துடன், நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து பி.கே.ஆர். கட்சி பிரிந்து வரும் என்று மறைமுகமாகவும் கருத்து வெளியிட்டிருக்கிறார். அறுபது ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அம்னோ-விற்கு ஒரு தவணைக் காலம்கூட எதிர்க்கட்சியாக இருந்து ஜனநாயகக் கடமை ஆற்ற மனமில்லை; சமுதாய நோக்குமில்லை. மாறாக, அதன் பதவி மோகம் இன்னமும் தணியவில்லை என்பதைத்தான் சாகிட் அமிடியின் எண்ணமும் சொல்லும் வெளிப்படுத்துகின்றன.
பாகான் டத்தோவில் மீண்டும் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் அத்தொகுதிவாழ் இந்தியர்களுக்கு இலவச பிணப்பெட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அத்தொகுதியில் தேசிய முன்னணி வென்றது; ஆனாலும் ஆட்சியை இழந்தது. இப்படிப்பட்ட நிலையில் இலவச பிணப்பெட்டி குறித்து அங்கு தே.மு. சார்பில் வென்றவரான இவர் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.
இதுவொரு புறமிருக்க, இதற்கு முன், மலாய்க்காரர்கள் தங்களின் அரசியலையும் பிரச்சினையையும் இருபத்தியிரண்டு ஆண்டுகளாக ஓர் இந்தியரிடம் ஒப்படைத்து விட்டு ஏமாந்து இருந்தனர் என்று துன் மகாதீரை மிகக் கடுமையாக சாடினார் இதே அமிடி. அப்படிப்பட்ட அமிடிதான், மகாதீர் தேர்தலில் வென்றதும் தேசிய முன்னணி சார்பிலும் அம்னோ சார்பிலும் ஓடோடி வந்து முதல் ஆளாக அவரை சந்தித்தார்.
இப்பொழுது, தேசியத் தலைவருக்கான தேர்தலே இன்னும் முடியாத நிலையில், தன்னுடைய அதிகார மோகத்தை இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.