ஹரப்பான் தலைவர்களே, தேர்தல் வாக்குறுதியைப் பின்பற்றுங்கள், தேசிய பாதுகாப்பு மன்றத்தை ஒழித்துக் கட்டுங்கள்

 

கடுமையாக விமர்சிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) சட்டம் 2016 தொடர்ந்து, சில மாற்றங்களுடன், பயன்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்திருந்த கருத்துக்கு பல பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹரப்பானின் 14 ஆவது பொதுத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தபடி இந்தச் சட்டம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைடின் கூறினார்.

எனது கருத்துப்படி இச்சட்டம் வாக்குறுதியளித்துள்ளவாறு அகற்றப்பட வேண்டும், ஏனென்றால் இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று, அமனா தலைவரான முகமட் சாபு ஹரப்பான் அரசாங்கம் இச்சட்டத்தை மறுஆய்வு மற்றும் மறுசீரமைப்பு செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது என்று பல்டி அடித்தார்.

முன்பு, ஹரப்பான் தலைவர்கள் இச்சட்டத்தை மிகக் கொடுமையான சட்டம் என்று வர்ணித்திருந்தனர். ஆனால், இப்போது இச்சட்டம் அரசாங்கத்திற்கு ஒரு நல்ல வாகனம் என்று மாட் சாபு கருதுகிறார்.

வழக்குரைஞரான ஹனிபா இவ்விவகாரம் மீதான அவரது எதிர்ப்பை அமனாவின் மத்தியக் குழு கூட்டத்தில் இன்றிரவு தெரிவிக்கப் போவதாக கூறினார்.

மரியா: வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் ஹரப்பான் காப்பாற்ற வேண்டும் என்றார்.

மிகக் கொடுமையானது என்று வர்ணிக்கப்பட்ட இச்சட்டத்தை ஒழிக்க முடியாது என்று கூறுவதுகூட சிந்திக்க முடியாததாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் நீதி மற்றும் மக்களின் சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளுக்கு முரணான சட்டங்கள் அனைத்தும் புதிய நிருவாகம் ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டுகாலத்தில் ஒழிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததை அரசாங்கத்திற்கு நினைவுறுத்த விரும்புகிறேன் என்று அவரது அறிக்கையில் கூறும் மரியா, “அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிலைநிறுத்த வேண்டும்”, என்றும் கூறியுள்ளார்.

ஹனிபா கூறியுள்ளதைப் போல், மரியாவும் இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அதில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனிபட்ட உரிமைகளை இது சட்டவிரோதமாக மீறுகிறது என்றும் கூறினார்.

வழக்குரைஞர் லத்திபா கோயாவும் ஹரப்பான் அரசாங்கத்தில் இச்சட்டம் மறுஆய்வு செய்வதற்கான இடமே இல்லை, அதை ஒழிப்பதற்கு மட்டுமே இடமுண்டு என்றார்.

இச்சட்டம் மக்களாட்சி மற்றும் சட்ட ஆளுமை ஆகிய கோட்பாடுகளைத் தெள்ளத்தெளிவாக கீழறுப்பு செய்கிறது. அதற்கு இந்தப் புதிய மலேசியாவில் இடமில்லை என்றாரவர்.

எவருக்கும் எந்த அமைப்புக்கும் இம்மாதிரியான கட்டுக்கடங்காத, தடைகளற்ற அதிகாரங்கள் அளிக்கப்படக்கூடாது என்று லத்திபா மேலும் கூறினார்.

ஹரப்பான் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் வழி முந்தைய அரசாங்கத்தின் அதிகார அத்துமீறல்கள் கடந்தகால ஒன்றாக இருப்பதை ஹரப்பான் உறுதி செய்ய வேண்டும் என்றாரவர்.