முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர்(ஏஜி) அறிக்கையை இரகசிய பாதுகாப்புச் சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ் வைக்க தம் அரசாங்கம் செய்த முடிவு தப்பாகப் போயிற்று என்றார். அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகள் வேண்டத்தகாத கதைகளை கட்டிவிடலாம் என்று அஞ்சியதால் அதை இரகசியாக வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
வேடிக்கை என்னவென்றால், அந்த அறிக்கையை ஓஎஸ்ஏ-இன்கீழ் வைத்தது வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் ஆனது. நஜிப் எதையோ மூடி மறைக்கப் பார்க்கிறார் என்று அவரின் அரசியல் எதிரிகள் பலவாறு பேசுவதற்கு அது இடமளித்தது.
மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் முன்னாள் பிரதமர், பொதுப் பணத்தைச் சொந்தத்துக்குப் பயன்படுத்திக் கொண்டதில்லை என்று உறுதியாகக் கூறியதுடன், பினோக்கிப் பார்க்கும்போது அந்த அறிக்கையை இரகசியமாக வைத்திருக்க வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது எனவும் குறிப்பிட்டார்.
“தேர்தலை எதிர்நோக்கி இருந்ததால் தகவல்களை யாரும் திரித்துக் கூற இடமளிக்கக் கூடாது என்று நினைத்தோம்.
“ஏஜி அறிக்கை எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டிருந்த பிஏசி-க்கு அனுப்பப்பட்டு அவர்களும் படித்துப் பார்த்துவிட்டு மனநிறைவு கொண்டார்கள். அது போதும் என்று நினைத்தோம்.
“ஆனால், பின்னோக்கிப் பார்க்கும்போது ஏஜி அறிக்கையை பிஏசி(பொதுக் கணக்குக்குழு) அறிக்கையுடன் இணைத்து வெளியிட்டிருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது”, என்று நஜிப் கூறினார்.
கடன் வாங்கி அரசு நிறுவனங்களை நடத்துவது நல்ல முடிவல்ல என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதுதான் 1எம்டிபி-யைப் புதைமணலில் சிக்க வைத்தது என்றார்.
“1எம்டிபி வெளிப்படைத்தன்மையுடனும் நல்ல நிர்வாக முறையுடனும் பொறுப்புடனும் நடக்க பல முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதற்கு வருந்துகிறேன். அதுதான் அங்கு பல கோளாறுகளுக்குக் காரணம்”, என்றும் சொன்னார்.
பிஏசியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருந்தார்கள் என்றாலும் அக்குழு 1எம்டிபி விவகாரத்தில் தாம் குற்றமிழைத்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
டிஎபி-இன் முன்னாள் கெப்போங் எம்பி டான் செங் கியாவ்கூட தமக்கு அதில் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக அறிவித்ததையும் நஜிப் சுட்டிக்காட்டினார்.
1எம்டிபி மீது விசாரணை நடத்திய பிஏசி நஜிப்பைக் குற்றவாளி என்று கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால், முக்கிய நிர்வாகிகள் சிலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்திருந்தது.
இரண்டாண்டுகள் ஆகி விட்டபோதிலும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது ஏன் என்று வினவியதற்கு , ஒருவேளை அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லாமலிருந்திருக்கலாம் என்றார்.
“அந்த அறிக்கையை போலீசுக்கும் மற்ற அமலாக்கத் துறைகளுக்கும் அனுப்பி வைத்த பின்னர் நடவடிக்கை எடுப்பது அவர்களின் பொறுப்பு.
“ஒருவேளை அவர்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லையோ, என்னவோ. வெறுமனே நடவடிக்கை எடுத்துவிட முடியாது”, என்றார்.