அரேபிய நன்கொடையாளர், அறவாரிய நிதிகள் பற்றி ஸாகிட் விசாரிக்கப்படவிருக்கிறார்

 

அவர் தலைமையேற்றிருந்த அறவாரியத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது பற்றி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியை நாளை விசாரிக்கப் போகிறது என்று த ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது.

வட்டாரங்களை மேற்கோள் காட்டிய அச்செய்தி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நன்கொடைகள் பெறுவது சம்பந்தமாக சவுதி அரேபிய அரச குடும்பத்தை அவர் சந்தித்ததாகக் கூறப்படுவது பற்றியும் விசாரிக்கப்படுவார் என்று கூறுகிறது.

அச்செய்தியின்படி, ரிம800,000 க்கான கிரடிட் கார்டு கடன்களை அடைப்பதற்கு அந்த அறவாரியத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

சவூதி இளவரசரை சந்தித்தாக அவர் கூறிக்கொண்டது பற்றியும் விசாரிக்கப்படுவார்.

அவர் சந்தித்ததாகக் கூறப்படும் நபர் பற்றி நாங்கள் அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதோடு அச்சந்திப்பின் போது என்ன நடந்தது என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று அந்த வட்டாரம் கூறியது.

இச்செய்தி குறித்து எம்எசிசியின் கருத்தைப் பெற உயர்மட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பயன் அளிக்கவில்லை.