பெர்சத்துவின் மூவார் எம்பி சைட் சித்திக் டிஏபி-இன் இயோ பீ ஹின் உள்பட 13 புதிய அமைச்சர்கள் இன்று காலை இஸ்தானா நெகராவில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
26வயது சித்திக் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில் 35வயது இயோ எரிபொருள், தொழில்நுட்ப, அறிவியல், வானிலை மாற்ற விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கிறார்.
புதிய அமைச்சர்களின் நியமனத்தில் பிகேஆரே அதிகமான இடங்களைப் பெற்றது. அதற்கு நான்கு இடங்கள், பெர்சத்து, டிஏபி, அமனா ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்கள்.
பிகேஆரைச் சேர்ந்த புதிய அமைச்சர்கள் சைபுடின் அப்துல்லா(வெளியுறவு), சைபுடின் நசுத்தியோன்(உள்நாட்டு வாணிகம், பயனீட்டாளர் விவகாரம்) , டாக்டர் சேவியர் குமார் (நீர், நில, இயற்கை வளம்), பாரு பியான் (பொதுபணி) ஆகியோராவர்.
பாரு சரவாக்கைச் சேர்ந்தவர். சரவாக்கில் அவர் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி. சாபாவைப் பொறுத்தவரை மூவர் அமைச்சர்களாகிறார்கள்.
வாரிசானைச் சேர்ந்த லியு வுய் கியோங் பிரதமர்துறையில் சட்ட விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாரிசானைச் சேர்ந்த மற்ற இரண்டு அமைச்சர்கள் டேரல் லெய்கிங்(அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சு)கும் முகம்மட் டின் கெதாபி(சுற்றுலா, கலை, கலாச்சாரம்) யும் ஆவர்.
டிஏபி-இல் இயோ தவிர தெரேசா கொக்-கும் அமைச்சரானார். அவர் மூலத் தொழில் அமைச்சரானார்.
அமனாவின் காலிட் சமட் புதிய கூட்டரசுப் பிரதேச அமைச்சர். அவரின் சகா முஜாஹிட் யூசுப் பிரதமர்துறையில் சமய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.