அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசாங்கம் கட்டணங்களை உயர்த்தக் கூடாது, உயர்த்தினால் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யை அகற்றி வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் பக்கத்தான் ஹரப்பானின் நோக்கம் நிறைவேறாமல் போகும்.
வணிகத் துறைக்கான மின்கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“ஹரப்பான் வாக்குறுதி அளித்தபடி ஜிஎஸ்டி-டை இரத்துச் செய்திருந்தாலும்கூட வர்த்தகர்கள் மின்கட்டண உயர்வைக் காரணம் காட்டி விலைகளைக் குறைக்காமல் இருந்துவிடலாம் என்று அஞ்சுகிறேன்.
“அதற்காகத்தான் 2018 ஜூலையிலிருந்து டிசம்பர்வரை கூட்டரசு அரசாங்கம் எந்தக் கட்டண உயர்வையும் தவிர்ப்பது முக்கியம் என நினைக்கிறேன். பொருள் விலைகளை நிலைப்படுத்தும் அரசாங்க முயற்சிகளை வர்த்தகர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய அது அவசியம்”, என்றார்.
தெனாகா நேசனல் பெர்ஹாட்(டிஎன்பி) மின்கட்டணத்தை உயர்த்தப்போவதாக பெர்னாமா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. ஆனால், வீடுகளுக்கான கட்டணத்தில் மாற்றமிருக்காது.