1எம்டிபியிலிருந்து சட்டவிரோத பணத்தைப் பெற்றதற்காக முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குச் சொந்தக்காரர்கள் தாமே முன்வந்து சம்பந்தப்பட்ட பணத்தை ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஆணையத் தலைவர் ஷுக்ரி அப்துல் இன்று எச்சரித்தார்.
“முடக்கப்பட்ட கணக்குகளில் உள்ள பணம் 1எம்டிபியிலிருந்து வந்ததுதான் என்பதற்கு எங்களிடம் தெளிவான ஆதாரங்கள் உண்டு”, என்று ஷுகிரி இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
1எம்டிபி சிறப்புப் பணிக்குழு உறுப்பினர்களில் ஒருவருமான ஷுக்ரி, வங்கிக் கணக்குகளை முடக்குவதற்குமுன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
“அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை”, என்றாரவர்.
திடுமென செய்ய வேண்டியிருந்தது. முன்கூட்டியே தெரிவிப்பது கணக்கிலிருந்த பணத்தை எடுப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதுபோல் ஆகிவிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
யாராருடைய கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவோ அவர்கள் தாமே முன்வந்து பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஷுக்ரி கேட்டுக்கொண்டார்.
“கணக்குக்குச் சொந்தக்காரர்கள் தாமே முன்வந்து பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“அது மக்களின் பணம். அதில் ஒரு சென்னாக இருந்தால்கூட அது திரும்பப் பெறப்படும் என்று பணிக்குழு உறுதி கூறுகிறது.
“அவர்கள் முன்வரவில்லை என்றால் பிறகு சட்ட நடவடிக்கைதான்”, என்றார்.