தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு ஆதரவாக ஓர் ஒற்றுமை பேரணி புத்ரா ஜெயாவில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமையகத்திற்கு வெளியில் இன்றிரவு நடத்தப்படும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் கூறுகிறார்.
அப்பேரணி இரவு மணி 9 லிருந்து 11 வரையில் நடத்தப்படும் என்றாரவர்.
அனைத்து மலேசியர்களும் இப்பேரணியில் பங்கேற்று நஜிப்புக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்ட அவர், நஜிப் ஏன் ஓர் இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று அவரது அறிக்கையில் கேட்டுள்ளார்.
அவர் என்ன கிரிமினலா, சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பி ஓடிவிடுவதற்கு என்று வினவிய லோக்மான், நஜிப் எம்எசிசி தலைமையகத்திற்கு வந்து ஒத்துழைப்பு அளித்ததைச் சுட்டிக் காட்டினார்.
இன்னொரு அறிக்கையில், பத்து பகாட் அம்னோ தொகுதித் தலைவர் முகமட் புவாட் ஸார்காசி எம்எசிசி நஜிப்புக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கை அவருக்கு எதிரானவர்கள் வஞ்சம் தீர்க்க அளித்த அழுத்தத்தின் அடிப்படையில் எழுந்ததல்ல தாம் நம்புவதாகக் கூறினார்.
எம்எசிசி அதன் நடவடிக்கைகளைத் தொழிலியல் முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.