ஸெட்டி: ரிம2.6 பில்லியன் விவகாரத்தில் நஜிப் தவறு ஏதும் செய்யவில்லை என்று என்னை அறிக்கை வெளியிடச் சொன்னார்

 

2013 பொதுத் தேர்தலுக்கு முன்பு, அம்பேங்க் இஸ்லாமிக்கில் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் வைக்கப்பட்டிருந்து தமக்குத் தெரியும் கூறப்படும் குற்றச்சாட்டை பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸ் நிராகரித்தார்.

“இக்கூற்று போலியானது என்று நான் திட்டவட்டமாக அறிவிக்கிறேன். அவருடைய கணக்கில் ரிம2.6 பில்லியன் வைக்கப்பட்டிருந்து பற்றி எனக்குத் தெரியாது”, என்று நஜிப் கைது செய்யப்பட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஸெட்டி மலேசியாகினிக்கு வழங்கியிருந்த அறிக்கையில் கூறுகிறார்.

ஸெட்டி ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தினார்: ஜூலை 3, 2015 இல், இந்த விவகாரம் வெளியான போது அவர் பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“அவரது கணக்கில் அவர் [நஜிப்] தவறு ஏதும் செய்யவில்லை என்று ஓர் அறிக்கை வெளியிடுமாறு என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

“நான் அவ்வாறான ஓர் அறிக்கை வெளியிட முடியாது ஏனென்றால் அவரது கணக்கில் நடந்தவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவரிடம் தெரிவித்தேன்”, என்று ஸெட்டி கூறினார்.

ஸெட்டியின் கூற்றுப்படி, ஓர் அமைச்சரும், அவரது பெயரை ஸெட்டி குறிப்பிடவில்லை, இதே போன்ற வேண்டுகோளை விடுத்ததாகவும் அவரிடமும் இதையே கூறினார்.

இந்த விவகாரத்தில் நடந்தவை பேங்க் நெகாரா கவனர் ஸெட்டிக்கு தெரியும், ஆனால் அது பற்றி அவர் தம்மிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்று கடந்த வாரம் மலேசியாகினிக்கு அளித்திருந்த சிறப்பு நேர்காணலில் நஜிப் கூறியிருந்ததற்கு ஸெட்டி மேற்கண்டவாறு கூறினார்.