இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மூன்று கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் ஒரு எஸ்ஆர்சி இன்டர்நேசனல் நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகார அத்துமீறல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக்கின் முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து தாம் குற்றவாளி அல்ல என்று நஜிப் கூறினார்.
இதற்கு முன்பாக அவர் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்திலுள்ள செசன்ஸ் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.
வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் செய்து கொண்ட மனுவை நீதிபதி அனுமதித்தார்.
உயர்நீதிமன்றத்தில், நஜிப்புக்கு எதிராக நான்கு குற்றைச்சாட்டுகள் முறையாகச் சுமத்தப்பட்டன. கிரிமினல் நம்பிக்கை மீறல் புரிந்ததாக தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்), செக்சன் 409 இன் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும், எம்எசிசி சட்டம் 2009, செக்சன் 23 இன் கீழ் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
முதல் மூன்று குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமலும் இருபது ஆண்டுகளுக்கு மேற்போகாமலும் சிறைதண்டனை விதிக்கப்படலாம். மேலும், பிரம்படியும்/அல்லது அபராதமும் விதிக்கப்படலாம்.
நான்காவது குற்றச்சாட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், நஜிப் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைதண்டனையும், சபந்தப்பட்ட தொகையின் மதிப்பில் ஐந்து மடங்கிற்கு மேற்போகாத அபராதம் அல்லது ரிம10,000, இதில் எது அதிகமோ அது விதிக்கப்படும்.
ரிம1 மில்லியன் பிணை
நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் இரு நபர்களின் உத்தரவாதத்தோடு ரிம1 மில்லியன் பிணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.