இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் இன்று பிற்பகல் கோலாலும்பூர் கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது.
ஜமாலின் வழக்குரைஞர் இம்ரான் தம்ரினைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார்.
“அவர் பிற்பகல் 2.15க்கு வந்து சேர்வார்”, என்று இம்ரான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
வந்து சேர்ந்தவுடனே ஜமால் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இம்ரான், தன் கட்சிக்காரர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டுக் குற்றம் சாட்டப்படுவாரா அல்லது விசாரணைக்காக மேலும் தடுத்து வைக்கப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்.
திங்கள்கிழமை தென் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஜமால், இன்று காலை கோலாலும்பூருக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் இந்தோனேசிய குடியரசு போலீஸ் தலைமையகத்தில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.