முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தனக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக்கொள்ள நீதிமன்ற வழக்கு மட்டும்தான் ஒரே வழி என்பது சரியல்ல என்கிறார் டிஏபி இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்.
“நேற்று குற்றஞ்சாட்டப்பட்ட நஜிப் தம்மீதான களங்கத்தைத் துடைப்பதற்கு நீதிமன்ற வழக்குதான் தமக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“அது முற்றிலும் தவறு. அவரும் அவரது அரசாங்கமும் மூன்றாண்டுகளாக தொடர்ந்து மறுத்து வந்தது ஏன், மலேசியர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே தம்மைக் களங்கங்கமற்றவர் என்று காண்பித்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்பதை நஜிப் விளக்கிட வேண்டும்”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நஜிப் 1எம்டிபிமீது அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைத்து தம்மைக் களங்கமற்றவர் எனக் காண்பித்துக் கொண்டிருக்கலாமே என்றாரவர்.
“நஜிப் தாம் திருடரல்ல என்று கூறியுள்ளார். அது உண்மை என்றால் 14வது பொதுத் தேர்தல் பரப்புரைகளில் அவரைத் ‘திருடர்’ என்று பகிரங்கமாகக் குறிப்பிட்ட பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்மீது வழக்கு தொடுக்காதது ஏன்?”, என்று லிம் வினவினார்.