மிகக் குறைந்த அளவே நம்பிக்கைக்குரியவர்கள் யார் என்றால் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்தான் என்பது Centre For a Better Tomorrow (சென்பெட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
நாடு முழுக்க 21 க்கும் 65 வயதுக்குமிடைப்பட்ட ஆயிரம் பேரிடம் அவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு நடத்தி ஒரு பட்டியல் போட்டதில் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தார்கள் அரசியல்வாதிகள். 16 விழுக்காட்டினர்தான் அரசியல்வாதிகள் நம்பத்தக்கவர்கள் என்று கூறியிருந்தனர்.
அவர்களுக்கு அடுத்த இடம் மைய நீரோட்ட ஊடகங்களுக்கு. 23 விழுக்காட்டினர்தான் ஊடகங்கள் நம்பத்தக்கவை என்று கூறினர். இணையத்தள ஊடகங்களின் நிலை சற்று தேவலை. 31 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
மைய நீரோட்ட ஊடகங்களிலும் மாற்று ஊடகங்களான இணைய ஊடகங்களிலும் “வெளியார் தலையீடு” அதிகம் அதனால்தான் அவற்றை நம்ப முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டது.
மிகக் குறைந்த அளவே நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் முன்றாவது இடம் கூட்டரசு அரசாங்கத்துக்கு. 29 விழுக்காட்டினர்தான் அது நம்பத்தக்கது என்றார்கள்.
இவ்வாய்வு இவ்வாண்டு பிப்ரவரி 8-இலிருந்து பிப்ரவரி 22வரை , மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்டது.
அடுத்தடுத்த இடங்களில் முனிசிபல் மன்றங்கள்(38 விழுக்காடு), அரச மலேசிய போலீஸ்(44 விழுக்காடு), மலேசிய நீதிமன்றங்கள்(45விழுக்காடு) இடம்பெற்றிருந்தன.
ஊராட்சி மன்றங்களில் திறமையின்மை அதிகமாம். அதனால்தான் அவற்றின்மீது நம்பிக்கை குறைந்திருந்தது.
போலீஸ்மீது நம்பிக்கை குறைவதற்குக் காரணம் ஊழல் என்று கூறப்பட்டது.
அதேபோல் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேர் நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருப்பதாகக் கூறினர். ஆனால், 17 விழுக்காட்டினர் அதை ஒப்புக்கொள்ளவில்லை, 33 விழுக்காட்டினருக்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை.
60 விழுக்காட்டினரின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஒரே அரசாங்க அமைப்பு ஆயுதப் படைகள்.
ஆயுதப்படைகளின்மீது நம்பிக்கை வைப்பதற்கு அவர்களின் கட்டொழுங்கும் கடும் பயிற்சியும் காரணங்களாகக் கூறப்பட்டன.