சிறப்பு நேர்காணல் :14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரக் காலத்தின் போது, டிஏபி பிரச்சார பலகையில் இருந்த டாக்டர் மகாதீரின் முகத்தை அதிகாரிகள் வெட்டி வீசும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதுவரை, தேர்தல் ஆணையம் (இசி) பி.என்.-னுக்கு ஆதரவாக செயல்பட்டது என்று குற்றம் சாட்டிவந்த பக்காத்தான் ஹராப்பான், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கையும் இந்தச் சம்பவத்தில் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
ஆனால், மலேசியாகினியுடன் நடந்த ஒரு சிறப்பு நேர்காணலில், தான் அவ்வாறு செய்ய உத்தரவிடவில்லை என்றும், இசி-யின் நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை என்றும் நஜிப் தெரிவித்தார்.
தேர்தல் நடைமுறைகளில் தான் தலையிட்டிருந்தால், மே 9, பொதுத் தேர்தலில் பி.என். தோல்வியடைந்திருக்காது என்று நஜிப் கூறினார்.
டாக்டர் மகாதிர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, தேர்தல் ஆணையம் மற்றும் அம்னோவில் சிலர் நாசவேலைகளில் ஈடுபட்டிருந்ததாக வதந்திகள் இருந்ததை தான் அறிந்திருந்ததாக அவர் கூறினார்.
“இது வெறும் ஊகம் தான், சிலர் நாசவேலை நடந்ததாக சொல்கிறார்கள், எங்களுக்கு தெரியாது.
“நீங்கள் சம்பவத்தின் தொடர்ச்சியைப் பார்க்க வேண்டும், பொருத்தமான நபரைக் கேட்க வேண்டும். சில நேரங்களில் அது மேல் மட்டத்தில் நடக்காது, கீழே நடக்கும், ஆனால் நான் யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
தேர்தல் தினத்தன்று நடந்த சில விஷயங்கள், குறிப்பாக வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையைக்கூட அவருடன் தொடர்புபடுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை என்று நஜிப் சொன்னார்.
“வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தது எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது, எங்கள் ஆதரவாளர்கள் பெரும்பான்மையினர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு கூறப்பட்டனர், சிலர் வீடு திரும்ப முடிவு செய்தனர், அவர்கள் ஏமாற்றமடைந்தனர், வாக்களிக்க மூன்று அல்லது நான்கு மணிநேரம் அவர்கள் காத்திருந்தனர்.
“இது நடந்திருக்கக் கூடாது,” என்றார் அவர்.
13-வது பொதுத் தேர்தலில், வாக்களிப்பு மையங்களில் நான்கு வாக்குச் சாவடிகள் இருந்தன, இம்முறை வாக்காளர்கள் அதிகரித்துள்ள சமயத்தில், தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளை அதிகரித்திருக்க வேண்டும் எனவும் அந்த முன்னாள் அம்னோ தலைவர் குற்றஞ்சாட்டினார்.
“இது போன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன். வாக்குச் சாவடி 1 அல்லது 2 தான், 50 வயதைக் கடந்த வாக்காளர்களின் வாக்களிப்பு, இரண்டாவது அல்லது மூன்றாம் மாடியில் வைக்கப்பட்டிருந்தது, மூத்தக் குடிமக்களுக்கு உதவ வேண்டும், இது வாக்காளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலோர், பி.என்.னுக்கு வாக்களிக்க எண்ணம் கொண்டவர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதைக் கேள்விபட்டு, வாக்களிக்க வெளிவர தயங்கினார்கள் என்றும் நஜிப் விளக்கப்படுத்தினார்.
“இது எங்களுக்கு (பி.என்.) தீங்கு விளைவித்த விஷயங்கள்.
“ஆனால், அமைப்பு முறை அப்படியானது. ஒரு சிறு பிரச்சனையானாலும், அரசாங்கத்தையும் பிரதமரையும் குற்றம் சொல்வார்கள்,” என்றார் அவர்.
அவருடன் மலேசியாகினியின் நேர்காணல் பின்வருமாறு :-
மலேசியாகினி : பி.என்.-ஐ பொறுத்தவரை, தவறு எங்கே?
நஜிப் : அது நீண்ட கதை. எல்லா தவறுகளையும் சொல்ல வேண்டுமென்றால் மாலை வரை நாம் இங்கு இருக்க வேண்டிவரும். உண்மையில் அது, ஒருசில பிரச்சனைகளால் நேர்ந்தது, பல உள் நாசவேலைகள், பலவீனங்கள் ஆகியவற்றின் விளைவு ….
நாங்கள் நல்ல முறையிலேயே பிரச்சாரம் செய்து வந்தோம். நாட்டைக் கட்டமைக்க, எங்களிடம் பெரும் திட்டங்கள் இருந்தன, அவற்றை நாங்கள் மக்களோடு பகிர்ந்துகொள்ள எண்ணினோம். எங்களிடம் மலேசியாவிற்கான தொலைநோக்கு திட்டங்கள் இருந்தன. நாம் அதை செயல்படுத்தி இருக்கிறோம், மேலும் இன்னும் அதிகமாக செய்ய முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம்.
அவை மிகவும் நல்ல திட்டங்கள் என்று நாங்கள் நினைத்தோம். வளர்ச்சி விகிதம், நிலையான மேம்பாடு, குறிப்பாக சபா மற்றும் சரவாக் மற்றும் தீபகற்பத்தின் கிழக்கு கரையோர மாநிலங்கள், முன்பு புறக்கணிக்கப்பட்டது போல் இல்லாமல், பொது போக்குவரத்து, வேலை வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தியதோடு, பங்குச் சந்தையையும் மேம்படுத்தியுள்ளோம்.
ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றிருந்தது, பொருட்களின் விலைகள் சிறப்பாக இருந்தது. ஒருதலை பட்சமான ஐபிபி ஒப்பந்தத்தை நிறைவு செய்து பல பில்லியன் ரிங்கிட்டை சேமித்தோம், பிளாஸ் (PLUS) நெடுஞ்சாலை கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க, மீண்டும் அதனை வாங்கினோம்.
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும், மலேசியா மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே அதிக வருமானம் கொண்ட நாடு நிலையை அடையும் என்று கணித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும், நடுத்தர வர்க்கம் உட்பட, வருமான வரிகளில் கணிசமான குறைப்பு மற்றும் வருமானம் RM4,000 அல்லது கீழே இருந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, B40 குழுவினருக்குப் பல்வேறு விதிவிலக்குகளை நான் அளித்தேன்.
நிச்சயமாக, நான் பிரதமராக இருந்த ஒன்பது ஆண்டுகளில், பெருமிதம் கொள்ளும் பலவற்றைச் செய்திருக்கிறோம். எங்களின் மிகப்பெரிய தவறு என்னவென்றால், செய்ய முடியாத, இனிப்பான வாக்குறுதிகளை (தேர்தல் அறிக்கையில்) நாங்கள் வழங்கவில்லை என்று நாங்கள் நினைக்கின்றோம், எதிர்த்தரப்பு செய்ததுபோல் எங்களால் செய்ய முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.
மலேசியாகினி : இந்தத் தோல்வி, பி.என்.-க்கு முடிவாக அமைந்துவிடுமா?
நஜிப் : பி.என்.-னுக்கு இது முடிவு என்று நான் நினைக்கவில்லை, ஆனால் பிஎன் முன்னோக்கிச் செல்ல ஒரு கடுமையான சவாலாக அது இருக்கும். நிச்சயமாக, பலவீனமானவர்களுக்கு அல்ல, இத்தகைய சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க நமக்கு தைரியம் வேண்டும், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற பாடுபட வேண்டும்.
‘சீர்திருத்தம்’ (ரிஃபோர்மாசி) அதை நாம் மறந்துவிடக்கூடாது, இன்று அதனை அடைய 20 வருடங்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில், 2004-இல், அவர்கள் (எதிர்க்கட்சி) கிட்டத்தட்ட முற்றிலும் (தேர்தலில்) அகற்றப்பட்டனர், ஆனால் அவர்கள் மீண்டும் வீருகொண்டு எழுந்தனர். முதல் சீர்திருத்த போராட்டத் தலைவர்கள் பற்றி பேச பலர் இருந்தனர், அவர்கள் சிறிது காலம் அரசு “விருந்தினர்”களாகவும் இருந்தனர், ஆனால் நிலைமை இன்று வித்தியாசமாக இருக்கிறது.