அரசாங்க தமிழ் வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் அன்றாடம் மாலை 5:00 மணி முதல் முன்னிரவு 7:00 மணி வரையும் சில நாட்களில் 8:00 மணி வரையிலும் செய்தி அறிக்கை, பழைய பாடல்கள், போக்குவரத்து தகவல், ஏதேனும் புதிய அறிக்கை, நேயர்களின் தொலைபேசி உரையாடல், இடையிடையே அறிவிப்பாளர்களின் அக்கப்போரான அரட்டை ஆகியவற்றைக் கேட்டாலும் அலுப்பும் சலிப்பும் ஏற்படும் அளவுக்கு எண்டிரிகோஸ் நிறுவனத்தின் பால் மாவு-நெய் விளம்பரம், ‘மை காப்பி’ விளம்பரம், இணைய கொள்முதல் குறித்த விளம்பரம் ஆகியன மூச்சுக்கு மூச்சு.. .. பேச்சுக்குப் பேச்சு என்ற அளவில் ஒலியேற்றப்படுகிறது.
எண்ட்ரிகோஸ் நிறுவனத்தைப் பற்றி, உள்ளம் உருக விளம்பரம் செய்து நேயர்களைக் கவரும் தெய்வீகன் தாமரைச் செல்வன், புவனா வீரமோகன், இரவீன், சுகன்யா சதாசிவம் ஆகிய நால்வரையும் உள்ளப்டியே எத்துணை பாராட்டினாலும் தகும். வீதியோரத்தில் கூவி கூவி பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரிகளைப் போல இவர்கள் இத்தனை பாடுபட்டு எண்ட்ரிகோஸ் பொருட்களை வான வீதி வழி விற்க முற்படுவதால், எண்ட்ரிகோஸ் முதலாளி சுந்தரம் இவர்கள் நால்வருக்கும் காலமெல்லாம் கடன் பட்டிருக்க வேண்டும்; குறிப்பாக, இதனை ஒருங்கிணைக்கும் மின்னல் வானொலியின் நிருவாகி குமரனுக்கு.
இந்நால்வரில், தெய்வீகனைப் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எண்ட்ரிகோஸ் பால் கலந்த தேநீரையோ அல்லது எண்ட்ரிகோஸ் தயாரிப்பான மை காப்பியைப் பற்றியோ விளம்பரம் செய்யும்போது “ஒரு முறை குடித்துப் பாருங்கள்; குடித்துக் கொண்டே இருப்பீர்கள்” என்று சொல்லிக் கொண்டே அப்படியே தேநீரை உறிஞ்சுவதைப் போல நடித்துக் காட்டுவார்.
ஒன்று செய்யலாம்; பேசாமல் மின்னல் பண்பலை வானொலியை எண்ட்ரிகோஸ் பால் மாவு நிறுவனத்திற்கே குத்தகைக்கு விட்டுவிடலாம்.
ஒரு நாளில் எத்தனை தடவை ஒரு விளம்பரத்தை ஒலியேற்றுவது என்ற வரைமுறை எதுவுமே இன்றி, இந்த அறிவிப்பாளர்கள் ஏன் இப்படி பால் – நெய் வியாபாரிகளாக மாற வேண்டும்?. இந்த விளம்பரங்களில்,
“பச்சை டின்னு மஞ்ச மூடி” என்று தொடங்கும் விளம்பரத்தை எத்தனை முறைக் கேட்டாலும் ஓர் இனிமையான உணர்வு உள்ளத்தைத் தொற்றிக் கொள்ளும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரேயொரு வார்த்தைகூட வேற்று மொழி கலப்பில்லாமல் நெய் வாங்க வரும் சிறுவனாக கலைஞரும் நாடக எழுத்தாளருமான சோதிராஜன் பரஞ்சோதியின் குரலும் கடைக்காரராக ‘நினைவில் வாழும்’ பண்பட்ட கலைஞரும் இலக்கியவாதியுமான பி.கே. சாமியின் பேச்சும் இணைந்து கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
அதற்கான ஓர் அரச வானொலியில் ஒரு நாளில் எத்தனை தடவை அதையே மீள மீள.. .. , திரும்பத் திரும்ப ஒலியேற்றுவது. இதை படைக்கும் அறிவிப்பாளருக்கே மனம் உறுத்தவில்லையா? அப்படி விழுந்து விழுந்து விளம்பரம் செய்ய வேண்டிய கடப்பாடு என்ன இருக்கிறது இந்த அறிவிப்பாளர்களுக்கு? கொஞ்சமாவது தங்களைத் தாமே பரிசோதித்துக் கொள்ளும் தன்மை வேண்டாமா?
எண்ட்ரிகோஸ் பொருட்களை இணைய வசதி மூலமும் பெறலாம் என்பதை வலியுறுத்தும் இன்னொரு விளம்பரத்தில் ஒரு தாயும் மகனும் நடிப்பார்கள். அதை, ஒரே நிமிடத்தில் இரண்டு மூன்று முறைகூட ஒலிபரப்புவது தகுமா என்பதை இவர்கள் ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
வானொலி, தொலைக்காட்சி, இணைய ஏடுகளில் விளம்பரம் என்பது பொதுவான நடைமுறை என்றாகிவிட்டாலும், இந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பால மாவு, நெய், கோப்பி கலவைக்காக இந்த அறிவிப்பாளர்கள் எண்ட்ரிகோஸ் நிறுவனத்தின் முகவர்களாக செயல்படுவதும் மின்னல் பண்பலை வானொலி நிலையத்தை எண்ட்ரிகோசின் விற்பனை முனையமாக மாற்றுவதும் அத்துணைப் பொருத்தமாகப்படவில்லை.
காலம் என்னும் நல்லாசிரியர்தான் இந்தக் கோளாறுகளை நேர்ப்படுத்த வேண்டும்.
‘ஞாயிறு’ நக்கீரன்
ஐய்யா,ஞாயரு நக்கீரன் அவரகளே அஸ்ட்ரோவில் நாள்முழுவதும் அறுக்குக்கும்,பெர்ம்பான்சமா அர்காசமா hotal சமா தீடோசாமா
அஸ்ட்ரேவின் தொல்லைதாங்கமுடியலையே,