முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக்கொள்வதுபோல் அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரைத் தற்காத்துப் போராட டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தயாராக இருக்கிறார்.
“அரசியல் பழிவாங்கல் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டினால் அவரைத் தற்காக்க நான் தயார்”, என லிம் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நஜிப்பின் கூற்று உண்மைதானா என்றும் லிம் வினவினார். எம்ஏசிசியின் ஆரஞ்ச் நிற லாக்-அப் ஆடை கட்டாயமாக அணிவிக்கப்பட்டு நஜிப் நீதிமன்றம் கொண்டுவரப்படவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் பிணைப்பணத்தை இரண்டு தவணைகளில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினர்..
எம்ஏசிசி நஜிப்பிடம் நடந்துகொண்ட முறையை லிம் பாராட்டினார். இதுவே ஊழல்தடுப்பு ஆணையத்தின் புதிய நடைமுறையாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.