நாட்டை ஆண்ட முன்னைய அரசாங்கங்களைவிட ‘புதிய மலேசியா’ சிறப்பாக செயல்படும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின் அமைந்த புதிய பக்கத்தான் ஹரப்பான் அரசுதான் மக்களால் ‘புதிய மலேசியா’ என அழைக்கப்படுகிறது.
“இப்புதிய மலேசியா நான் பிரதமராக இருந்த 22ஆண்டுக்கால அரசைவிடவும் மேம்பட்ட ஒன்று”, என ( Investvine) இன்வெஸ்டிவ் என்னும் ஹாங்காங்கின் வணிக இணையத் தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் கூறினார்.
புதிய மலேசியா என்கிறபோது மக்களின் விருப்பத்தை மதித்து அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் சட்ட ஆளுமைக்கும் முக்கியத்துவம் வழங்கும் என்றார்.
“மக்களுக்கு முந்தைய அரசாங்கத்தைப் பிடிக்கவில்லை. எனவே நாட்டை அதன் முன்னைய நிலைக்குக் கொண்டுசெல்ல நாங்கள் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது. முன் காலங்களில் அரசு அதிகாரிகள் அரசியலில் புகுந்து உழப்பிக் கொண்டிருந்ததில்லை. கட்சிகளில் உறுப்பு வகிக்காமல் அரசாங்கக் கொள்கைகளைச் செயல்படுத்தும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
“ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் பெருமளவு மாறி விட்டிருந்தார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டும் வேலையை வெளிப்படையாகவே செய்தார்கள். அது தவறு. அவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள். முந்தைய அரசாங்கம் (தேர்தலில்) வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்கள், சில வேளைகளில் தவறான காரியங்களையும் செய்தனர்”, என்றார்.
இன்வெஸ்டிவுக்கு வழங்கிய அந்த நேர்காணலில் டாக்டர் மகாதிர் பொதுச் சேவை ஊழல் குறித்தும் பேசினார்.