மக்களவைத் தலைவர் பதவி: ஹரப்பான் கூட்டம் நடத்தவிருக்கிறது

 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்க பக்கத்தான் ஹரப்பான் உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த விருப்பதாக துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார்.

கட்சி வேட்பாளர்களின் முதலாவது பட்டியல் பிரதமர் மகாதிரின் கவனத்திற்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றாரவர்.

நாங்கள் இன்று ஒரு கூட்டம் நடத்தினோம். பக்கத்தான் ஹரப்பானுக்குள் மிக உயர்ந்த அளவில் சந்திக்கவிருக்கிறோம். அதன் பின்னர் நாங்கள் ஒரு முடிவு எடுப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

தலைவர் பதவிக்கான முன்மொழியப்படும் பெயர்கள் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் ஒரு வாரத்திற்குள் தேவைப்படுகிறது என்று அவர் இன்று காஜாங்கில் கூறினார்.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தை பேரரசர் சுல்தான் முகமட் V அதிகாரப்பூர்வமாக ஜூலை 16 இல் திறந்து வைப்பார்.