மகாதிர்: ஜிஎல்சி போஸ்கள் பெரும் சம்பளம் பெற்றுவந்த காலம் மலையேறிவிட்டது

அரசாங்கச்  சார்பு  நிறுவனங்களின் (ஜிஎல்சி)  தலைவர்கள்,   அந்நிறுவனங்கள்  சிறப்பாக   செயல்பட்டாலும்   படாவிட்டாலும்   பெரும்  சம்பளம்   பெறுவது  இனி   நடக்காது   என்று   எச்சரித்துள்ளார்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்.

கடந்த   காலத்திய   அரசாங்கத்துக்கு    அதன்   ஆதரவாளர்களை  ஜிஎல்சி  தலைமைப்  பொறுப்புகளில்   அமர்த்துவது    வசதியாக   இருந்தது.  அப்படி   அமர்த்தப்பட்டவர்கள்   அந்நிறுவனங்களிடமிருந்து  பெரும்   சம்பளத்தைப்  பெற்று  வந்தார்கள்.

“அதன்  விளைவு   நிபுணத்துவம்  இல்லாதவர்கள்   தொழில்   பற்றி    அறியாதவர்கள்  ஜிஎல்சிகளில்  உயர்  பொறுப்புகளை    வகித்து   வந்தார்கள்.

“அதன்  காரணமாக   ஜிஎல்சிகள்    பணம்  இழந்தன,  ஆனால்,  இவர்கள்  மட்டும்  நிறுவனம்   ஆதாயம்   பெறுகிறதா  இல்லையா   என்ற  கவலை  இல்லாமல்   அனுபவித்துக்  கொண்டிருந்தார்கள்”,  என்றவர்  ஹாங்காங்கின்   இணைய  செய்தித்தளமான  (Investvine) இன்வெஸ்டிவுக்கு     வழங்கிய  நேர்காணலில்  கூறினார்.

இப்போதைய    பக்கத்தான்   ஹரப்பான்   அரசு   தகுதிபெற்ற  நிபுணர்களையே  ஜிஎல்சிகளுக்கு  நியமிக்கும்  என்றும்    அவர்களின்   சம்பளம்  மிகப்    பெரிதாக   இருக்காது    என்றும்    பிரதமர்   கூறினார்.

“சம்பளம்  பொதுச்   சேவையில்   உள்ளதைவிட    சற்று    உயர்வாக    இருக்கும்.  அவர்கள்   சிறப்பாக    செயல்பட்டால்   போனஸ்  கொடுக்கப்படும். இப்போது   கிடைப்பதுபோல்   பெரிய   வருமானம்   கிடைக்காது”,  என்றார்.

“அவர்கள்  கட்சி   ஆள்களாக  இல்லையா”   என்பது  முக்கியமல்ல   நிறுவனத்துக்குத்   தலைமையேற்க    தகுதியானவர்களா   என்பதே  முக்கியம்  என  மகாதிர்  குறிப்பிட்டார்.