எம்ஏசிசி தலைவர் ஷுக்ரி அப்துலுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால் பயனேதும் இல்லை என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம் . முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதான விசாரணைகளில் ஷுக்ரி பாரபட்சமாக நடந்து கொண்டார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக போலீஸ் புகாரும் செய்தவர்தான் இப்போது இப்படிக் கூறுகிறார்.
“அவரைப் போன்ற ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுப்பதால் நேரம்தான் விரயமாகும்.
“இன்றைய மலேசிய அரசாங்கம் சட்ட ஒழுங்குகளைமீறி நடந்து கொள்கிறது. அது சட்டத்தைப் பின்பற்றுவதில்லை என்பது நமக்குத் தெரியும்”, என்றாரவர். இன்று காலை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் திரண்டிருந்த நஜிப் ஆதரவாளர்களில் லொக்மானும் ஒருவர்.
1எம்டிபி-இன் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட் விவகாரம் தொடர்பில் நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நஜிப், பிணைப் பணமான ரிம1 மில்லியனில் மறுபாதியைச் செலுத்துவதற்காக இன்று நீதிமன்றம் வருவதாக இருந்தது. அவர் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.