இப்போது நடந்து கொண்டுருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சம்பந்தப்பட்ட வழக்கில் நஜிப் “பாதிக்கப்பட்டவராக நடிப்பதை” நிறுத்த வேண்டும் என்று பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீபா கோயா கூறுகிறார்.
“ஹலோ நஜிப், இப்போதைய காலம் உங்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் சட்டத்துறை தலைவரை நீங்கள் பொறுக்கி எடுத்த பழைய காலம் அல்ல.
“பாதிக்கப்பட்டவராக நடிப்பதை நிறுத்துங்கள்” என்று நஜிப் சட்டத்துறை தலைவர் டோமி தோமஸுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கில் அவரது சத்தியப் பிரமாணம் தாக்கல் செய்யப்பட்டது குறித்து எதிர்வினையாற்றிய லத்தீபா டிவிட்டர் செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோமி தோமஸ் எழுதியிருந்த ஒரு கட்டுரையை மலேசியாகினி வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையை சத்தியப் பிரமாணத்தில் இணைத்திருக்கும் நஜிப், அக்கட்டுரை தோமஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.
ஆகவே, தோமஸ் தமக்கு எதிராகத் தப்பெண்ணம் கொண்டிருக்கிறார் என்று நஜிப் வாதிட்டார்.
இந்த வழக்கில் நஜிப் குற்றவாளியா அல்லது இல்லையா என்று சட்டத்துறை தலைவர் முடிவு எடுக்கப் போவதில்லை. அவர் அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தோமஸுக்கு தம்மை பிடிக்கவில்லை என்று நஜிப் கூறுகிறார். இந்த வழக்கில் அந்தப் பிரச்சனை எழவில்லை என்று லத்தீபா தொடர்பு கொண்ட போது மலேசியாமினியிடம் கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு தலைமை ஏற்றிருக்கும் டோமி தோமஸை அப்பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு நஜிப் அவரது வழக்குரைஞர் முகம்மட் ஸாபி அப்துல்லா மூலம் முயன்று வருகிறார்.