நாட்டுக்கு விரிவான சுகாதார நிதியுதவித் திட்டம் தேவை

சுகாதார  அமைச்சு   நாட்டுக்கு   ஒரு  விரிவான   சுகாதார  நிதியுதவித்   திட்டத்தை   ஏற்படுத்திக்  கொடுப்பது   பற்றி   ஆலோசிக்க   வேண்டும்   என்று   பொருளாதார  வல்லுனர்  ஒருவர்    பரிந்துரைத்துள்ளார்.

அத்திட்டம்   நீண்ட    காலமாகவே    கவனிப்பாரற்று   கிடப்பதாகக்  கூறிய    மலேசிய   பொருளாதார    ஆய்வுக்  கழகத்தின்    மூத்த   ஆய்வாளர்     சங்கரன்   நம்பியார்,   அதன்  மீது   நிறைய    ஆய்வுகள்   செய்யப்பட்டுள்ளன  என்றும்   ஆனால்    அதை  நடைமுறைப்படுத்த    நடவடிக்கை   எடுக்கப்பட்டதில்லை   என்றும்   சொன்னார்.

மக்கள்தொகையில்  பெரும்  பகுதியினருக்கு   வயதாகிக்  கொண்டிருப்பதால்  சுகாதார  நிதியுதவியைக்  கவனிக்காமல்   இருக்க  முடியாது    என   சங்கரன்   கூறினார். 2030  வாக்கில்   மக்கள்தொகையில்   14 விழுக்காட்டினர்  60  வயதைத்  தாண்டியிருப்பார்கள்    என்று  கூறும்  புள்ளிவிவரங்களை     அவர்    சுட்டிக்காட்டினார்.

“இது   2030  வாக்கில்  மூத்த   குடிமக்கள்  அதிகமாக   இருப்பார்கள்    என்பதை,  சுகாதாரப்  பிரச்னைகளுடன்   நிறைய    பேர்   இருப்பார்கள்   என்பதை,  பொது  மருத்துவமனைகளில்   நீண்ட   வரிசைகள் காத்திருக்கும்  என்பதை,   அரசாங்கம்  கூடுதல்   மருத்துவச்  செலவை   ஏற்க   வேண்டியிருக்கும்    என்பதைக்  காண்பிக்கிறது”,  என   சங்கரன்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

மருத்துவமனைகளில்,    காத்திருக்கும்   நேரத்தைக்   குறைக்கப்   போவதாக   புது   சுகாதார  அமைச்சர்   சுல்கிப்ளி   அஹ்மட்   கூறியிருப்பது   பற்றிக்   கருத்துரைத்தபோது   சங்கர்     அவ்வாறு    கூறினார்.