அனுப்பப்பட்ட நகைகளுக்காக ரோஸ்மா மீது வழக்கு

 

லெபானின் புகழ் பெற்ற மொத்த நகைக்கடைக்காரர் அவர் அனுப்பிய நகைகளுக்காக ரோஸ் மன்சோருக்கு எதிராக யுஎஸ்$14.9 மில்லியன் (ரிம59.831 மில்லியன்) கோரி கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த 44 வகையான நகைகள் கடந்த பெப்ரவரியில் அனுப்பட்டு, போலீஸால் மேயில் கைப்பற்றப்பட்டது.

குளோபல் ரோயல்டி டிரேடிங் சால் அந்த வழக்கை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவிக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் டேவிட் குருபாதம் மற்றும் கோயே வழக்குரைஞர் நிறுவனத்தின் வழி கடந்த ஜூன் 26 இல் பதிவு செய்துள்ளது. மலேசியாகினி அந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்த்துள்ளது.

ரோஸ்மா அந்த நிறுவனத்தின் நீண்டகால வாடிக்கையாளர் என்றும், அவருக்கு அனுப்பப்படும் நகைகளில் அவருக்குப் பிடித்தவற்றை எடுத்துக்கொள்வாரர் என்றும், அதற்கான விலையை அவரோ மூன்றாம் தரப்பினரோ கொடுப்பர் என்றும் அந்த நிறுவனம் அது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கோரிக்கை ஆவணத்தில் கூறுகிறது.

தேர்வு செய்யப்படாத நகைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நகைகளை ரோஸ்மா வாங்கவில்லை, வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்

லெபனான் நகைக்கடைக்காரர் பட்டியலிட்டுள்ள நகைகளில் எதனையும் ரோஸ்மா வாங்கவில்லை என்று அவரின் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

அந்நிறுவனம் அனுப்பிய நகைகள் அனைத்தும் அவர் பார்ப்பதற்காக அனுப்பட்டன. அவர் எதையும் வாங்கவில்லை என்று ரோஸ்மாவின் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

ரோஸ்மா அந்த நகைகளை திருடப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கினார் என்று பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையும் உண்மையும் அற்றவை என்று ரோஸ்மாவின் வழக்குரைஞர்கள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகின்றனர்.

மேலும், ரோஸ்மாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவரின் வழக்குரைஞர்களான கே. குமரேந்திரன் மற்றும் கீதன் ராம் வின்சென்ட் கூறுகின்றனர்.