சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்ம ட் யூனுஸுக்கு ஷா ஆலம் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ரிம400 ரிங்கிட் அபராதம் விதித்தது.
பொது இடத்தில் தொல்லை விளைவித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் சிலாங்கூர் மாநிலச் செயலக் கட்டிடத்துக்கு வெளியில் ஜமால் பீர் போத்தல்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.அக்டோபர்பெஸ்ட் பீர் விழாவுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி அளிப்பதை எதிர்த்து அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக ஜமால் கூறினார்.
அக்குற்றத்துக்காக ஜமாலுக்குப் பிணை வழங்கப்படவிருந்த நேரத்தில் அம்பாங் நிபுணத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் போலீஸிடமிருந்து தப்பி ஓடினார்.
மலேசியாவில் சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் இந்தோனேசியாவுக்கு நழுவினார்.
மலேசியா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தோனேசிய போலீசார் ஜூலை 2-இல் ஜமாலைக் கைது செய்து மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பினர்.
மலேசியா வந்ததுமே அவர்மீது போலீஸ் காவலிலிருந்து தப்பி ஓடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.அவ்வழக்கில் அவர் குற்றவாளி என நிறுவப்படுமானால் அவருக்கு ஈராண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
சுடும் ஆயுதம் இருப்பதை வெளியில் காட்டியது, அத்துமீறல் என வேறு பல குற்றச்சாட்டுகளையும் ஜமால் எதிர்நோக்குகிறார்.