பினாங்கில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர், கட்சிக்காக இஸ்லாமிய அமைப்புகளைத் தாக்குவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகக் கூறி அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முதல் தவணை ஸ்ரீடெலிமா பிரதிநிதியான ஷியர்லீனா ரஷிட் நேற்று பிற்பகல் மணி 3.30க்கு தம் அஞ்சல் பெட்டியில் கொலை மிரட்டல் குறிப்பைக் கண்டதாகக் கூறினார்.
“அது என் பாதுகாப்புக்கும் உயிருக்குமான மிரட்டல். கடிதங்களை எடுப்பதற்காக சென்றபோது அதைக் கண்டேன். அச்சமடைந்தேன்”, என கிரீன் லேனில் தம் சேவை மையத்தில் ஷியர்லீனா செய்தியாளர்களிடம் கூறினார்.
அக்குறிப்பில் ”Maut menanti my(உனக்குச் சாவு காத்திருக்கிறது”) எனக் கையால் எழுதப்பட்டிருந்தது.
ஷியர்லீனாவுக்கு எதிராக அபாண்டமாகக் கூறப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அடுத்து இப்படி ஒரு குறிப்பு வந்துள்ளது. அவர் டிஏபிக்காக நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளையும் குறிப்பாக ஜாகிமை(மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை)த் தாக்கப்போவதாக சூளுரைத்துள்ளாராம். இன்னொரு குற்றச்சாட்டு ஷியர்லீனா கிறிஸ்துவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ சமயமாக்குவதற்குப் போராடப் போகிறாராம்.
ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அக்குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.
“அவை குறித்து போலீசிலும் புகார் செய்தேன். அவ்வாறு குற்றம் சுமத்திய முகநூல் பக்கங்கள் குறித்தும் போலீசுக்குத் தெரிவித்தேன்”, என்றாரவர்.
கொலை மிரட்டல் குறித்து அவர் ஜெலுத்தோங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முகநூல் பக்கங்கள் வெளிநாட்டுப் பயனர்களுக்குச் சொந்தமானவை எனச் சாக்குப்போக்கு கூறிக்கொண்டிருக்கக் கூடாது என்றார்.
“இப்போது புதிய அரசாங்கம் என்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோம்.
“கொலை மிரட்டலுக்கான நோக்கம் எனக்குத் தெரியாது. அதை அனுப்பியவர்களையும் தெரியாது. ஆனால் இதற்கும் முன்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன்”, என ஷியர்லீனா மேலும் கூறினார்,