இந்திய பாரம்பரிய தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை, தீர்வு கண்டிட மனிதவள அமைச்சரிடம் பரிந்துரை

(அமைச்சர் குலாவுடன் முத்துசாமி திருமேனி, ஜவுளிக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் திருமதி மகேஸ்வரி உட்பட இந்திய வர்த்தக-தொழிற்சங்க பொறுப்பாளர்கள்)

மலேசிய இந்திய பாரம்பரியத் தொழில்கள், தொழிலாளர் பற்றாக்குறையால் தொடர்ந்து நலிந்து வரும் நிலையில், தற்பொழுது இது குறித்து உள்துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்யப் போவதாக இந்திய வர்த்தக சங்கத் தலைவர்களிடம் மனித வள அமைச்சர் மு.குலசேகரன் நேற்று புத்ராஜெயாவில் தெரிவித்தார் என்று இந்திய-வர்த்தக சங்கத்தினர் சார்பில் பிரிமாஸ் தலைவர் முத்துசாமி திருமேனி தெரிவித்தார்.

காலங்காலமாக தொடரும் இந்தச் சிக்கலைப் பற்றி மனித வள அமைச்சக அதிகாரிகளிடம் எடுத்துரைக்கவும் இதன் தொடர்பில் உரிய கொள்கை முடிவை எடுக்கவும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்(பிரிமாஸ்), மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம்(பிரிஸ்மா), மசாலை மாவு தயாரிப்பாளர் சங்கம், சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கம், மளிகைக் கடை உரிமையாளர் சங்கம்,, ஜவுளி வணிகர் சங்கம், பொற்கொல்லர்-ஆபரண வணிகர் சங்கம், முஸ்லிம்  மொத்த & சில்லறை வியாபாரி சங்கம், குத்தகையாளர் சங்கம், சிலாங்கூர்-கோலாலம்பூர் பத்திரிகை விநியோகிப்பாளர் சங்கம், உலோக-மறுசுழற்சி வர்த்தகர் சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித வள அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.

அதோடு, அமைச்சர் குலசேக-ரனையும் சந்தித்த வேளையில் இந்திய வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஆள்பல பற்றாக்குறைப் பிரச்சினை பற்றியும் இதனால் இந்தியர்களின் வர்த்தகம் பேரளவில் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும்  இந்திய உணவக சங்கத் தலைவருமான முத்துசாமி திருமேனி குறிப்பிட்டார்.

இந்திய பாரம்பரிய வர்த்தக-தொழில் சங்கத்தினர் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினை அறிந்துகொண்ட அமைச்சர் குலசேகரன், இது குறித்து உள்துறை அமைச்சரிடமோ அல்லது அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலோ  ஆலோசனை செய்து உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள இருப்பதாக குலசேகரன் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வேளையில் மலேசிய இந்திய பாரம்பரிய தொழில்-வர்த்தக சங்கங்களின் சார்பில் மனித வள அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முத்துசாமி தெரிவித்தார்.