சர்ச்சைக்குரிய இந்தியாவின் இஸ்லாமிய சமய போதகர் ஸகிர் நாய்க்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா முறையான வேண்டுகோள் விடுத்துள்ளதா என்பது பற்றி முரண்பாடான கோரிக்கைள் எழுந்துள்ளன.
இந்தியா முறையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற கருத்தை மலேசிய அமைச்சர்கள் கோபிந்த் சிங் டியோவும் மு. குலசேகரனும் முன்வைத்துள்ளனர்.
ஆனால், பினாங்கு துணை முதலமைச்சர் II வேறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“ஒரு முறையான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதனை இந்திய அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர்”, என்று இராமசாமி இன்று மதியம் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்றைய இந்திய ஊடகச் செய்தியின்படி, ஸக்கீரை திருப்பி அனுப்புவதற்கான இந்தியாவின் முறையான வேண்டுகோள் இவ்வாண்டு ஜனவரியில் விடுக்கப்பட்டது என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
ஸகீரை திருப்பு அனுப்புவதற்கான முறையான வேண்டுகோளை நாங்கள் இவ்வாண்டு ஜனவரியில் செய்தோம். திருப்பி அனுப்புவதற்கான எங்களுடைய வேண்டுகோள் இக்கட்டத்தில் மலேசிய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று ரவீஸ் குமார் மேலும் கூறினார்.
இது மகாதிருக்கு ஆதரவு அளிப்பது பற்றியதல்ல
இந்தியாவில் பிறந்த இந்தச் சமய போதகரின் தகுதி பிரதமர் மகாதிருக்கு அளிக்கும் ஆதரவை தீர்மானிக்கும் அளவுகோலாகக் கருதப்படக்கூடாது என்று பக்கத்தான் ஹரப்பானின் சட்டம் இயற்றுபவர்களுக்கு அவர் நினைவூட்டினார்.
“இது மகாதிருக்கு ஆதரவு அளிப்பது பற்றியதல்ல, ஆனால் இந்தியாவில் (ஸக்கீர்) புரிந்துள்ள குற்றங்கள் பற்றியதாகும்”, என்று இராமசாமி சுட்டிக் காட்டினார்.
இக்கட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.
“சட்ட ஆளுமை அமல்படுத்தப் படுவதை உறுதி செய்யுங்கள் போதும்”, என்று இராமசாமி மேலும் கூறினார்.
தமது இந்திய வருகையின் போது தாம் பிரதமர் மோடியைச் சந்தித்தால் இந்தப் பிரச்சனையை அவரிடம் எழுப்புவேன் என்று குலசேகரன் கூறியிருந்ததற்கு இராமசாமி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை நேற்று அமைச்சரவை விவாதித்தது என்றும், இந்திய அரசாங்கம் இதற்கான வேண்டுகோளை தாக்கல் செய்தால் அது அதன் தகைமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ற ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.