முன்னாள் பிரதமரின் மனைவி ரொஸ்மா மன்சோர் -க்கு அனுப்பப்பட்ட லெபனான் நிறுவனங்களின் பொருட்கள், சுங்கத்துறையிடம் முறையாக அறிவிக்கப்படவில்லை என்றால், அவை பறிமுதல் செய்யப்படலாம்.
போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 44 செட் நகைகள் பற்றி கேட்டபோது, சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் டி சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.
“போலிசார் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை, அறிவிக்கப்படாத எந்தவொரு பொருளும் பறிமுதல் செய்யப்படலாம்,” என்று அவர் மலேசியாகினிக்குத் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் எம்பி ராயரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பற்றி சுப்ரமணியம் கருத்துரைத்தார். சுங்கத்துறையின் சோதனையின்றி, நகைகள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்று ராயர் கேள்வி எழுப்பியிருந்தார்.
“இந்தப் பொருள்களின் பெறுநர் யார்? சுங்க வரி செலுத்தப்பட்டதா? ரோஸ்மாவிடம் இவ்வளவு மதிப்பு வாய்ந்த இந்தப் பொருள்கள் எப்படி பத்திரமாக சேர்க்கப்பட்டன?” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.