‘எதிர்கால மலேசிய அரசியலைக் கட்டமைப்போம்’ – பி.எஸ்.எம்

மலேசிய சோசலிசக் கட்சியின் 20 ஆவது தேசிய மாநாடு, ‘பி.எஸ்.எம். – மக்களின் எதிர்கால அரசியல்’ என்ற கருப்பொருளோடு, இன்று பேராக், ஈப்போவில் தொடங்கியது.

14 ஆவது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், பல அரசியல் கட்சிகள் தங்கள் சேவை மையங்களை மூடிய வேளை, சில அரசியல் கட்சிகள் தங்கள் பங்காளிகளை விட்டுவிட்டு, வேறு அரசியல் கூட்டணிகளில் தங்களை இணைத்து கொண்ட வேளை, இடதுசாரி கட்சியான பி.எஸ்.எம்., இன்றும், வலுவாக முன்னோக்கி சென்று கொண்டிருப்பதைக் கண்கூடாக காண முடிகிறது.

“இதற்குக் காரணம், 20 ஆண்டுகளுக்கு முன்னர், பி.எஸ்.எம். உருவாக்கப்பட்டதில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அரசியலை நம்பி, நாங்கள் எங்கள் நிர்வாகத்தையும் திட்டங்களையும் கட்டமைத்தது கிடையாது. அதனால்தான், எங்களின் வாழ்வும் தாழ்வும், இந்த ஓட்டு பெட்டி தேர்தல் வெற்றி தோல்வியினால் நிர்ணயிக்கப்படவில்லை,” என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

1999 இல், தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதில் இருந்து, பி.எஸ்.எம். போன்ற ஓர் இடதுசாரி கட்சிக்கு வெற்றி தோல்வியினால் ஏற்படும் விளைவுகள் என்பது மிகக் குறைவு, காரணம் அக்கட்சியின் திட்டங்களும் செயல்களும், பிற கட்சிகளைப் போல பொதுத் தேர்தல் நெருங்கும் தருவாயில் அல்லாமல்; ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒன்று என சிவராஜன் கூறினார்.

“பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பின்னர், பலர் பி.எஸ்.எம். ‘கடையை மூடிவிடுமா?’ என்று கேட்டனர், காரணம் தேர்தலில் தோல்வியடைந்த ஓர் அரசியல் கட்சி பாயைச் சுருட்டிக்கொண்டு, காணாமல் போய்விடும் என்பது மக்களின் பொதுவான எண்ணமும் புரிந்துணர்வும்..,” என்றார் அவர்.

மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும் போது, அரசியல் நீரோட்டத்தில் வெறும் சந்தர்ப்பவாதிகளாக இல்லாமல், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாக சிவராஜன் மேலும் தெரிவித்தார்.

“14 ஆவது பொதுத் தேர்தலில் நடந்தது, அம்னோ-பிஎன் ஆட்சியின் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் பிரதிபலிப்பு. அதனால்தான், ஓர் அரசியல் சின்னத்தை வேறொரு சின்னத்திற்கு வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. ஆனால், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தால், சுதந்திரம், நீதி மற்றும் மக்களின் நலனுக்கு உத்தரவாதம் கொடுக்கும், ஓர் உண்மையான, உறுதியான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் கட்சியைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்,” என்று அண்மையப் பொதுத் தேர்தலில் கோத்தா டாமான்சரா சட்டமன்றத் தொகுதியில், பி.எஸ்.எம். சார்பில் போட்டியிட்ட சிவராஜன் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் செய்ததைப் போலவே, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பும் பணியைப் பி.எஸ்.எம். தொடர்ந்து செய்யும் என்றும்; மலேசியர்களின் எதிர்காலத்திற்கு, பி.எஸ்.எம். கொண்டுவரும் சோசலிச அரசியலானது, தற்போது நிலவிவரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புவதாகவும் சிவராஜன் விளக்கப்படுத்தினார்.

“சீர்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்,  முக்கியமான சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும், மக்களுடைய உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதா? அல்லது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என இனிப்பு வாக்குறுதிகளை அள்ளி வீசும் முதலீட்டாளர்கள், 1% உயரடுக்கினர், வணிகர்களைப் பாதுகாப்பதா? என்று..”

“பொதுச் சுகாதார சேவைத்துறை தனியார் மயமாக்கப்படுவதை ஹராப்பான் தொடர்ந்து அனுமதிக்குமா? திபிபிஏ போன்ற சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளால் நாட்டை அடகு வைக்கும், சர்வதேச பெருநிறுவன வலியுறுத்தல்களுக்கு இவர்கள் தொடர்ந்து செவிசாய்ப்பார்களா? நகர்ப்புற குடியேற்றக்காரர்கள் உரிமை மற்றும் மேம்பாட்டாளர்கள் உரிமை பற்றி அவர்களின் கருத்து என்ன? தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைக்கு வருமா? அல்லது முதலாளியின் ஆட்சேபனைகளுக்கு அவர்கள் அடங்கிப்போவார்களா? மேம்பாட்டாளர்கள் கூறுவதுபோல் கட்டுப்படி விலை வீடுகள் RM 200,000- RM350,000 என்பதில் ஏமாந்து போவார்களா அல்லது B40-க்கான மலிவு விலை வீடுகள் உண்மையில் RM42,000 எனும் எங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்வார்களா?” என சிவராஜன் பல கேள்வி கணைகளைத் தொடுத்தார்.

“இந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில், பி.எஸ்.எம். மற்றும் ஹராப்பான் இடையேயான வேறுபாடுகள் மற்றும் பகுப்பாய்வுகள், மக்களுடைய பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் கொண்டுவருவதற்கு சோசலிச நிலைப்பாடுதான் சரியானது என்பதை மக்களுக்கு நிரூபிக்கும்,” என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

நீண்டகாலமாக, அரசாங்க மற்றும் அரச சட்டங்களின் அனைத்து விதிகளும், அம்னோ-பிஎன் கீழ், பெருநிறுவனம் மற்றும் உயரடுக்கினர் நலன்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

“எனவே, ஹராப்பானில் சீர்திருத்தம் செய்வது மட்டும் இந்நிலைமைகளைச் சரிசெய்துவிடாது, மக்கள் ஒடுக்கப்படுவதை நிறுத்துவதற்கு இது போதுமானதாக இல்லை. தற்போதைய நிர்வாக மாற்றத்திற்கு நிலையான, உறுதியான நடவடிக்கைகள் தேவை. இந்த இலக்கை அடைய, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பி.எஸ்.எம். ஹராப்பானை வலியுறுத்தும்,” என்றார் அவர்.

பி.எஸ்.எம். கட்சியின், 20 ஆவது தேசிய மாநாடு, இரண்டு முக்கிய விவகாரங்களைப் பற்றி விவாதிக்க உள்ளதாக சிவராஜன் தெரிவித்தார். அவை :-

1) இன்றைய மாற்று அரசியலை, பொது மக்களிடையே இன்னும் பரவலாக எடுத்துச் சென்று, அரசியல் விழிப்புணர்வை உருவாக்க, பி.எஸ்.எம். என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2) பிஎன் ஆட்சியின் சரிவுக்குப் பின்னர், மக்களின் அடுத்த எதிர்பார்ப்பு என்ன, பி.எஸ்.எம்.-ஆல் அதனை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்?

சோசலிச இடதுசாரி அரசியல் கட்சியான பி.எஸ்.எம்., மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன்; சீர்திருத்தங்கள் மட்டுமல்லாமல், மாற்று அரசியலைக் கொண்டுவருவதற்கான பணியில் மிகவும் தெளிவாக இருப்பதாக சிவராஜன் தெரிவித்தார்.

இன்று மதியம் 3 மணியளவில், ஈப்போ தோ போ கியோங் மண்டபத்தில் தொடங்கிய மாநாடு, ஜூலை 15, ஞாயிற்றுக்கிழமை மாலையில் முடிவுறும்.