தொழில் அதிபர் ஜோ லோ, ஆண்டுத் தொடக்கத்தில் அவரது ஆடம்பரக் கப்பல் ஈக்குவானிமிடி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து முகத்தைத் திருத்தி அமைக்கும் சிகிச்சை செய்துகொண்டு புதிய முகத்துடன் உலவுகிறாராம்.
த ஸ்டார், அடையாளம் குறிப்பிடப்படாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி இதைத் தெரிவித்தது. மலேசிய, சிங்கப்பூர் போலீசார் லோ முகத்தை மாற்றி அமைக்கும் சிகிச்சை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்புகிறார்களாம்.
பினாங்கில் பிறந்த கோடீஸ்வரர் ஜோ லோ, முக்கிய பெருமக்களும் பிரபலங்களும் கைக்கொள்ளும் முறைகளைப் பயன்படுத்திக்கொண்டு குடிநுழைவுத்துறை சோதனைகளில் சிக்காமல் தப்பித்துக்கொள்கிறார் என்று அந்த அதிகாரிகள் நம்புகிறார்கள்.
“அதனால்தான் இண்டர்போல் சிவப்பு அறிவிக்கை விடுத்திருந்தும் லோ-வால் தென்கிழக்காசிய நாடுகளில் சிக்கலின்றி நடமாட முடிகிறது”, என்றவர்கள் கூறினர்.
ஜோ லோவின் நடப்புத் தோற்றத்தைக் காண்பிக்கும் படம் எதுவும் மலேசிய, சிங்கை போலீசிடம் இல்லை. அவர்களிடம் இருப்பவை எல்லா மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குமுன் பிடிக்கப்பட்டவை. அதனால், குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் பிடிக்கப்பட்ட அவரது படம் இருக்குமானால் அனுப்பி வைக்கும்படி அவர்கள் மற்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.