சிஜே: ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தால் வழக்கு ஒத்திவைப்பு அனுமதிக்கப்படும்

தலைமை    நீதிபதி   ரிச்சர்ட்    மலஞ்சோம்,      ‘மரணப்  பிடியில்  அல்லது  கிட்டத்தட்ட    மரணப்   பிடியில்  இருந்தால்  மட்டுமே’  வழக்கு   ஒத்திவைப்பு’   என்று  தமக்கு  முன்னிருந்தவர்  கடைப்பிடித்துவந்த  முறையைத்    தாம்   பின்பற்றப்  போவதில்லை   என்று   நேற்று   மலேசிய    வழக்குரைஞர்    சங்கத்திடம்     தெரிவித்தார்.

காரணங்கள்  ஏற்கத்தக்கவையாக  இருந்தால்    வழக்குகள்    ஒத்திவைக்கப்படுவதற்கு    அனுமதி    அளிக்கப்படும்  என்று   மலஞ்சோம்   தெரிவித்ததாக   மலேசிய    வழக்குரைஞர்    சங்கத்    தலைவர்    ஜார்ஜ்   வர்கீஸ்    கூறினார்.

“வழக்கு     ஒத்திவைப்பு    விவகாரத்தை    அவரிடம்   கொண்டு   சென்றோம்.   முன்னைய   தலைமை   நீதிபதி (முகம்மட்  ரவுஸ்   ஷரிப்)   ’மரணப்  பிடியில்  இருந்தால்’  மட்டுமே   வழக்கு   ஒத்திவைப்புக்கு   அனுமதி  அளித்த  கொள்கை    தொடர்ந்து   கடைப்பிடிக்கப்படுமா   என்று   வினவினோம்.

“நீதிமன்றங்கள்   இனி  அக்கொள்கையைக்  கடைப்பிடிக்க   மாட்டா  என்று   தலைமை   நீதிபதி    சொன்னார்.

“முறையான,  நியாயமான   காரணங்கள்   முன்வைக்கப்பட்டால்   ஒத்திவைப்புக்கு   அனுமதி   கொடுக்கப்படும்  என்று   மெலாஞ்சோம்   உத்தரவாதம்  அளித்தார்”,  என்றவர்   மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.

வழக்குரைஞர்கள்   எதிர்நோக்கும்   பிரச்னைகள்   குறித்து   விவாதிக்க   வழக்குரைஞர்   சங்கப்   பேராளர்களுடன்   அடிக்கடி-   இரண்டு   மாதங்களுக்கு  ஒரு   முறையாவது-     சந்திப்புகள்   நடத்தவும்   மலஞ்சோம்   ஒப்புக்கொண்டதாக   வர்கீஸ்   கூறினார்.