நஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று அரசாங்கம் பொய் சொல்லத் தேவையில்லை

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதாக உறுதியளித்து, பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டது என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றம் சாட்டினார்.

அந்த வாக்குறுதியை, ஹராப்பான் அரசாங்கத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியாது எனத் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

“எண்ணெய் விலையை RM1.50-க்கு குறைக்க முடியாது என்பது எனக்கு தெரியும், பொய் சொல்லத் தேவையில்லை.

“எனக்கு தெரியும், காரணம் அந்த நேரத்தில் நான் நிதியமைச்சராக இருந்தேன்.

“RM1.50-க்கு எண்ணெய் விலையைக் குறைத்தால், அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவென்று எனக்கு தெரியும்,” என்று அவர் கூறியதாக ‘சீனார் ஹாரியான்’ நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

14-வது பொதுத் தேர்தல் அறிக்கை விவாதத்தின் போது, வாரா வாரம் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தொட்டும் ஹராப்பான் பேசியிருந்தது.

ஹராப்பான் ஆட்சியைப் பிடித்தால், எண்ணெய் விலை குறைக்கப்படும் என்றும் சிலர் உறுதியளித்தனர்.

பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி, ஹராப்பான் புத்ராஜெயாவைப் பிடித்த மறுநாள் எண்ணெய் விலை குறைக்கப்படும் என்று பேசிய ஒரு வீடியோ பதிவு பரவலாக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால், அந்த வீடியோ பதிவு 13-வது பொதுத் தேர்தலின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. காரணம், அப்பதிவில் அவர் பக்காத்தான் ரக்யாட் எனக் குறிப்பிட்டிருப்பார்.

மே 9-ல், வாக்காளர்களை ஈர்க்க ஹராப்பான் இதுபோன்ற கதைகளைக் கூறியுள்ளது என நஜிப் தெரிவித்தார்.

“RM1.50-க்கு எண்ணெய் விலையைக் குறைக்க முடியாது என நான் தைரியமாக பந்தயம் கட்டினேன், அது வெறும் கட்டுக்கதை என்றேன்.

“ஆனால் துரதிருஷ்டவசமாக நம் இளைஞர்கள், முதல் முறையாக வாக்காளிப்பவர்கள் அதனை ஆழமாகப் பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.