இந்த நாடு பல துறைகளிலும் முன்னேற்றம் அடைய, அனைத்து இனங்களும் பாகுபாடின்றி தங்களை அர்ப்பணித்தன. ஆக, வாய்ப்பு, வசதிகள் இன, மத பேதமின்றி அனைவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியான் கூறியுள்ளார்.
நேற்றிரவு, ஜொகூர், தாமான் ஜொகூர் ஜெயாவில், ஜொகூர் பிகேஆர் இந்தியப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ‘ஜொகூர் மாநில முதல்வரோடு இந்திய மக்களின் சிறப்பு சந்திப்பு’ எனும் நிகழ்ச்சியில், பேசிய ஒஸ்மான் அவ்வாறு குறிப்பிட்டார்.
கல்வி, பொருளாதார வாய்ப்புகள், நலனபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் இனி குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு என்றில்லாமல், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இன, மத பேதமின்றி வழங்கப்படும் என்றார் அவர்.
குறிப்பாக, மலிவு விலை வீடுகள், சொந்த வீடு இல்லாத, ரிம 4,000-க்கும் குறைவான மாத வருமானம் பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
“முந்தைய அரசாங்கம் செய்தது போல, அரசு அதிகார ஒதுக்கீடு (கே.எம்.கே.) வழியில், இனவாரியான அரசியல் கட்சிகளுக்கு அவை இனி பகிர்ந்தளிக்கப்படாது. மாறாக, மாநிலக் கிராமப்புற வீட்டு வசதி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் கண்காணிப்பில், நேரடியாக, தகுதி அடிப்படையில் அவை வழங்கப்படும்,” என்றார் அவர்.
ஆகஸ்ட் மாதம் தொடக்கம், நீர் விநியோகத்திற்கு மாநில அரசாங்கம் மானியம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சிறப்பு சுகாதார அட்டை, கல்லூரி, பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு ஜொகூர் கல்வி வாரியத்தின் வாயிலாக ஊக்கத்தொகை என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல சலுகைகளையும் விரைவில் நடைமுறைபடுத்த மாநில அரசு முயற்சிக்குமென அவர் உறுதியளித்தார்.
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல், ஊழல், இலஞ்சம் மிகுந்திருந்ததால்தான் முந்தைய பாரிசான் அரசாங்கத்தை மக்கள் தண்டித்தனர் என்றும் ஒஸ்மான் தனதுரையில் குறிப்பிட்டார்.
“இனி அவ்வாறான தவறுகள், புதிய அரசாங்கத்தில் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால், மக்கள் நம்மை தண்டிப்பார்கள். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வெளிப்படையான முறையில் திட்டங்களை அமலாக்கம் செய்யும். தவறுகள் நடந்தால் நீங்கள் தாராளமாக என்னிடம் தெரிவிக்கலாம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நான் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுப்பேன்,” என்று அவர் எச்சரித்தார்.
“மக்களின் வரி பணத்தில் இருந்து, நமக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆக, ஹராப்பான் பிரதிநிதிகள் மக்களுக்கு நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி உங்களுக்கு இந்த ஊதியம் கட்டுப்படியாகவில்லை என்றால், பதவியை இராஜினாமா செய்துவிட்டு, வேறு ஏதாவது தொழில் செய்ய நீங்கள் செல்லலாம்,” என்றும் அவர் ஹராப்பான் பிரதிநிதிகளிடம் சொன்னார்.
மக்கள் பக்காத்தான் ஹராப்பான் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த மந்திரி பெசார், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜொகூர் மாநில இளைஞர், கலாச்சார மற்றும் பாரம்பரிய ஆட்சிக்குழு உறுப்பினர், முகமட் குஷான் அபு பாக்கார், “ஜொகூர் மக்கள் மாநில சுல்தான் கூறிவருவதுபோல், ‘பங்சா ஜொகூர்’ -ஆக உருமாற வேண்டும். புதிய அரசாங்கத்தில், இனியும் மலாய்க்காரர், சீனர், இந்தியர் என பிளவுபட்டு கிடக்க வேண்டாம்,” என்று தனதுரையில் குறிப்பிட்டு பேசினார்.
இந்திய இளைஞர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலப் பிகேஆர் இந்தியப் பிரிவின் தலைவரும், தீராம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் கோபாலகிருஷ்ணன் மாநில இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து தனது நீண்ட உரையில் தெளிவுபடுத்தினார்.
விருந்து, கலைநிகழ்ச்சியுடன், சுமார் 3 மணி நேரம் நடந்த அந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பொது மக்களோடு, அரசியல் தலைவர்களும் பொது அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.