இன்று காலை மணி 9க்கு, நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த டெக்சி ஓட்டுநர்கள், நாடாளுமன்றத்துக்கு 3கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடாங் மெர்போக்கில் திரண்டிருந்தனர் . 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இணையம் வழி நடத்தப்படும் வாடகைக் கார் சேவைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக அந்த 150 டெக்சி ஓட்டுநர்களும் அங்கு கூடியிருந்தனர். அங்கிருந்து அவர்கள் நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாகச் சென்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.
“கிராப் கார் சேவை ஒரு சட்டவிரோதத் தொழில்”, என்றவர்கள் முழக்கமிட்டனர்.
பெர்சிம்(மலேசிய டெக்சி ஓட்டுநர் உருமாற்றுச் சங்கம்) தலைவர் கமருடின் முகம்மட் ஹுசேன், சங்கம் அமைச்சிடம் கொடுப்பதற்கு ஒரு மகஜர் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வதைத் தடுக்க அங்கு சுமார் 15 போலீசாரும் இருந்தனர்.
போலீசும் ஆர்ப்பாட்டக்காரர்களும் பல சுற்றுப் பேச்சுகள் நடத்தினர். முடிவில், டாங் வாங்கி போலீஸ் மாவட்ட துணைத் தலைவர் ரூடி அப்துல்லா அமைச்சின் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திப்பார் என்றார்..