சொத்து விவரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும், அரைவேக்காட்டு தீர்வுகளுக்கு இடமில்லை- பிஎஸ்எம்

அமைச்சர்கள்  மற்றும்   துணை   அமைச்சர்களின்    சொத்துக்  கணக்கைப்  பகிரங்கமாக   அறிவிக்காததற்கு    பக்கத்தான்    ஹரப்பான்  முன்வைக்கும்   காரணங்களை    பிஎஸ்எம்,      ஏற்கத்    தயாராக  இல்லை.

சொத்துக்  கணக்கை   எம்ஏசிசிடம்   அறிவிப்பது   மட்டும்   போதுமானது   என்று  பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   கூறியதைத்   தற்காப்பு   அமைச்சர்  முகம்மட் சாபுவும்   வழிமொழிந்திருப்பது  குறித்து    பிஎஸ்எம்   தலைமைச்    செயலாளர்    ஏ.சிவராஜன்   கருத்துரைத்தார்.

“முன்னாள்   எதிரணியின்    அனல்  கக்கும்   பேச்சாளரும்   அமனா   தலைவருமான  ஒருவர்   அவ்வாறு  கூறியது   ஏமாற்றமளிக்கிறது”,  என  சிவராஜன்  இன்று ஓர்    அறிக்கையில்   கூறினார்.

நேற்று,  மாட்  சாபு    என்ற   பெயரில்   பிரபலமாக    விளங்கும்   முகம்மட்,   சொத்துக்  கணக்கைப்  பகிரங்கமாக    அறிவிக்காமலிருப்பது   சில   தரப்புகள்   தப்பான   அனுமானங்களுக்கு   வருவதைத்   தடுக்கும்   என்றார்.

எடுத்துக்காட்டுக்கு  ஏற்கனவே    செல்வந்தரான  ஒருவர்   எம்பி   அல்லது   அமைச்சரானால்    அவரது  சொத்து   அவர்  வகிக்கும்   அரசாங்கப்   பதவியால்தான்   வந்தது    என்று   சில   தரப்புகள்   கூறக்கூடும்    என்றவர்   சொன்னார்.

“எம்ஏசிசி    என்கிறபோது     ஒருவரின்   சொத்து    அவரின்   சம்பளம்,  அலவன்ஸ்  முலம்    வந்ததா,   குறுக்கு  வழியில்   வந்ததா  என்பது  அதற்குத்    தெரிந்து  விடும்.  அதுதான்   சொல்கிறேன்,       எங்கள்   சொத்துக்  கணக்கை    எம்ஏசிசி-இடம்   அறிவிப்பதுதான்   நல்லது.  பொதுமக்களில்   சிலர்   சரியான  முடிவெடுப்பவர்களாக   இருப்பார்கள்.  ஆனால்,  மற்றவர்கள்   அப்படி   இருக்க   மாட்டார்கள்”,  என  மாட்  சாபு   கூறினார்.

அவர்  முன்வைத்த   காரணத்தை   சிவராஜன்   ஏற்கவில்லை.  அரசாங்க   நிறுவனங்கள்      அரசியல்   எஜமானர்களுக்காக    அவற்றின்   நம்பகத்தன்மையை    விட்டுக்கொடுத்திருப்பதை   மலேசியர்கள்    கண்கூடாகக்  கண்டு   வந்திருக்கிறார்கள்.

“இன்னொரு   அரசாங்க   அமைப்பிடம்  அறிவிப்பதால்  பயன்   என்ன?”,  என்றவர்   வினவினார்.

பிஎஸ்எம்மின்     டாக்டர்  டி. ஜெயக்குமார்,  2008-இல்     சுங்கை   சிப்புட்   எம்பியாக   தேர்ந்தெடுக்கப்பட்டது  முதல்   மே  9  பொதுத்   தேர்தல்   தோல்விவரை    அவரது   சொத்துக்  கணக்கைப்  பகிரங்கமாக    அறிவித்து   வந்ததை     அவர்    சுட்டிக்காட்டினார். சொத்துக்  கணக்கு    ஆண்டுதோறும்  பகிரங்கமாக    அறிவிக்கப்படுவது   அவசியம்.  அப்போதுதான்   சொத்துப்  பெருக்கம்   ஏற்பட்டிருப்பதைக்   கண்காணிப்பது   எளிதாக  இருக்கும்.

“ஹரப்பான்   அதன்  வாக்குறுதியை   நிறைவேற்ற    வேண்டும். அரை  வேக்காட்டுத்தனமாக  பேசிக்  கொண்டிருக்கக்  கூடாது”,  என  சிவராஜன்   கூறினார்.