ஹரப்பான் தேர்தல் அறிக்கை ஒன்றும் பைபிள் அல்ல, மகாதிர் கூறுகிறார்

 

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு சொல்லையும் பின்பற்ற வேண்டிய தேவையில்லை என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்த பிரதமர், நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக முகமட் அரிப் முகமட் யூசுப் நியமிக்கப்பட்டிருப்பது தேர்தல் அறிக்கைக்கு ஒப்ப இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். தேர்தல் அறிக்கைப்படி, அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்க வேண்டும்.

“ஆம். ஆனால் சில காரணங்களுக்காக நாம் நடைமுறையிலுள்ள தேர்தல் அறிக்கையை கடைபிடிக்க முடியாது. தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள், தேர்தல் அறிக்கை ஒரு பைபிள் அல்ல, அது ஒரு வழிகாட்டுதல்”, என்று மகாதிர் கூறினார்.

சில வேளைகளில் நாம் ஒன்றைச் செய்யலாம். ஆனால் சில வேளைகளில் நாம் அதைச் செய்ய முடியாது. நாம் சாத்தியமானவற்றை செய்யும் மனப்பாங்குடையவராக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

மக்களவைத் தலைவர் எந்தக் கட்சிசார்புடையவராகவும் இல்லாதிருப்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று மக்களைத் தலைவராக நியமிக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட முகமட் அரிப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர்.