வெளிநடப்பு செய்த பின்னர் ஏன் திரும்பி வந்தீர்?, கேட்கிறார் கிட் சியாங்

 

இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்த நாடகம் டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு காலை முழுவது ஒரு புரியாத புதிராக இருந்திருக்கிறது.

மக்களவையில் இன்று காலை அவைத் தலைவர் முகமட் அரிப் நியமிக்கப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரணியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் வெளிநடப்பு செய்ததற்கு உறுதியான, நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் இருக்க வேண்டும். இன்று காலை நடந்த நகைப்புக்குரிய வெளிநடப்பு போல் இருக்கக்கூடாது.

பாஸ் மற்றும் அம்னோ தலைவர்கள் இதற்கு ஒரு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கொடுக்க முடியவில்லை என்றால், மசீச மற்றும் மஇகா விளக்கம் அளிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் கிட் சியாங்.

“நான் அவர்களைக் கேட்கவே மாட்டேன்”, என்றாரவர்.

14 ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தற்போதைய கூட்டத்தின் இரண்டாவது நாளில், அதாவது, நாளை, பேரரசர் நாடாளுமன்ற கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார். அக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப்பும் அவரது ஆதரவாளர்களும் ஏதேனும் நாசம் விளைவிப்பதில் ஈடுபடும் சாத்தியம் குறித்து கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொய்யானச் செய்தி மற்றும் தவறான தகவல் அடிப்படையில், 14 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பிஎன் மேற்கொண்ட தோல்வியுற்ற நச்சு அரசியலான இனம், சமயம், வெறுப்புணர்வு, அச்சம் மற்றும் பொய்கள் ஆகியவற்றை மீண்டும் புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் கிட் சியாங் கூறிக்கொண்டார்.

நஜிப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எடுக்கும் இச்செய்கள் நாட்டில் ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பெரும் இன மற்றும் சமயப் பிளவுக்கு இட்டுச் செல்லுமா என்பதை மலேசியர்கள் தீர்மானிப்பார்கள் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த எதிரணி உறுப்பினர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவைக்குத் திரும்பி வந்து பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.