மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், நாடாளுமன்ற மேலவையில் , பிஎன்னுடன் ஒப்பிடும்போது குறைவான இடத்தையே பெற்றுள்ள பக்கத்தான் ஹரப்பான் பிரச்னைகளை எதிர்நோக்கலாம் என்று நினைக்கிறார்.
“டேவான் நெகரா அம்னோ/பிஎன் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஹரப்பானுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறினார்.
இன்றைய நிலையில் 70-பேர் அடங்கிய மேலவையில் அம்னோ 30 இடங்களைப் பெற்றுள்ளது. 24 இடங்கள் காலியாகவுள்ளன.
எஞ்சிய இடங்கள் முன்னாள் பிஎன் கட்சிகளின் வசமுள்ளன. கெராக்கானுக்கு இரண்டு இடங்கள், காபோங்கான் பார்டி சரவா (ஜிபிஎஸ்) கட்சிகளுக்கு மூன்று இடங்கள், பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்), லிபரல் ஜனநாயகக் கட்சி(எல்டிபி) ஆகியவை தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.
பிஎன்னிலிருந்து வெளியேறிய ஜிபிஎஸ், பிபிஎஸ், எல்டிபி ஆகியவை ஆளும் ஹரப்பான் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாக உறுதி கூறியுள்ளன..
இப்போதைக்கு ஹரப்பான் செனட்டில் இரண்டு இடங்களைத்தான் வைத்துள்ளது. இன்று மேலும் எண்மர் செனட்டர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ஒரு சட்ட வரைவு சட்டமாவதற்குமுன் மேலவை, மக்களவை இரண்டுமே அதை ஏற்க வேண்டும்.
மக்களவையில் பிரச்னை இருக்காது என்று கூறிய காடிர் 222 பேரைக் கொண்ட மக்களவையில் ஹரப்பான் 125 இடங்களை வைத்துள்ளது என்றார்.