ஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட எந்தப் பதவிக்கும் போட்டியிடுவதற்கு தடை இருக்கக்கூடாது

பிகேஆர்    மகளிர்   தலைவர்   பொறுப்பிலிருந்து    வெளியேறும்   ஜூரைடா  கமருடின்,  கட்சியில்    எந்தப்   பதவிக்கும்,   அது   அன்வார்   இப்ராகிம்   போட்டியிடும்   தலைவர்   பதவியாக   இருந்தாலும்    சரி,   யார்    வேண்டுமானாலும்   போட்டியிட   அனுமதிக்க    வேண்டும்,  தடை  விதிக்கக்  கூடாது  என்று   அறிக்கை   வெளியிட்டுள்ளார்.

அதே    அறிக்கையில்  பொருளாதார     விவகாரங்களுக்கான   அமைச்சர்   அஸ்மின்   அலியின்  திறமைகளையும்    அவர்   பாராட்டி  இருந்தார்.

“அஸ்மின்   தலைமைதாங்கும்   திறமையுள்ள   ஆற்றல்மிக்க    தலைவர்களில்   ஒருவர்.  முன்பு    அவர்   சிலாங்கூர்   அரசில்   இருந்தபோது   இது   நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது  பொருளாதார    விவகார  அமைச்சராக    அவர்   ஆற்றிவரும்  பங்கு   அன்புக்குரிய  நம்  பிகேஆரைக்  கூட்டாக   வழிநடத்தும்   முயற்சிக்குப்   பெரிதும்  உதவும்.

“அன்வார்   கட்சித்  தலைவர்  பதவிக்குப்   போட்டியிடுவதை   வரவேற்கும்   பிகேஆர்   மகளிர்    அணி,   கட்சியின்   எந்தப்   பதவிக்கும்   போட்டி    இருக்குமானால்   அதற்கு   இடமளிக்கும்   கட்சி  அமைப்புவிதிகள்  மதிக்கப்பட  வேண்டும்  என்பதையும்  வலியுறுத்த   விரும்புகிறது”,  என்றாரவர்.

ஜூரைடா  அந்த   அறிக்கையின்  மூலமாக   அன்வாரை  எதிர்த்துப்   போட்டியிட   அஸ்மினை  ஊக்குவிக்கிறாரா  என்பது   புரியவில்லை.

அது  குறித்து   அவரிடமே    வினவியதற்கு   அஸ்மின்   எந்தப்   பதவிக்கும்  போட்டியிடத்   தயார்  என்று  மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.