மலேசிய கோடீஸ்வரர் ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் கேட்டதற்கு அவர் கைது செய்யப்பட்டது தமக்குத் தெரியாது என்றார். போலீஸ் படைத் தலைவர் பூஸி ஹருனும் அது பற்றி அறிந்திருக்கவில்லை.
“எனக்குத் தெரியாது. தகவல் சொன்னதற்கு நன்றி. அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அதைத்தான் நானும் விரும்புகிறேன்”, என்று மகாதிர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாவும் சீனாவும் குற்றவாளி ஒப்படைப்பு ஒப்பந்தம் வைத்துள்ளனவா என்று வினவியதற்கு, “இல்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் அவரைத் திருப்பி அனுப்பலாம்”, என்றார்.
மலேசிய அரசாங்க ஆலோசனை மன்றத் தலைவர் டயிம் சைனுடின் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு சீனப் பிரதமர் லி கெகியாங்கைச் சந்தித்துள்ள வேளையில் இத்தகவல் வந்துள்ளது.
ஜோ லோ கைதானதாகக் கூறும் தகவல் எதுவும் புக்கிட் அமானுக்குக் கிடைக்கவில்லை என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பூஸி கூறினார்.
“என்னிடம் அது பற்றிய தகவல் எதுவும் இல்லை. நான் விசாரிக்கிறேன்”, என்றாரவர்.
ஹாங்காங் வானொலி நிலையமொன்று பினாங்கில் பிறந்தவரான அந்தக் கோடீஸ்வரரை சீன அதிகாரிகள் கைது செய்திருப்பதாகக் கூறிக்கொண்டது என சரவாக் ரிப்போர்ட் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.