பக்கத்தான் ஹரப்பான் அதன் வாக்குறுதிகளை 100 நாள்களில் நிறைவேற்ற முடியாமலிருப்பதற்குக் காரணம் பிரச்னைக்குரிய அதிகாரிகளும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களும்தான் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“நாங்கள் (தேர்தல் வாக்குறுதிகளை) நிறைவேற்ற முயன்ற வேளையில் பல தடைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது”, என்றவர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.
“உதாரணத்துக்கு, முந்தைய அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் (தடையாக இருந்தன)”, என்றாரவர்.
“விசாரணைக்கு உள்ளான அதிகாரிகள், அவர்களால் பணியாற்ற முடியாதிருக்கிறது, அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது, அவர்களுக்குப் பதிலாக அமர்த்தப்படும் அதிகாரிகளுக்குப் போதுமான அனுபவம் இல்லை.
“இவையெல்லாம் வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்குத் தடைகளாக உள்ளன”, என்றார்.
பத்து வாக்குறுதிகளில் இரண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் ஆறு அமலாக்கப்படும் நிலயில் உள்ளன என்றும் இரண்டு வாக்குறுதிகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மகாதிர் கூறினார்.
கைரி ஜமாலுடின் (பிஎன் -ரெம்பாவ்) ஹரப்பான் வாக்குறுதிகள் குறித்து வினவியதற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார்.