கேமரன் மலை எம்பி சிவராஜாவின் மனு ஆகஸ்ட் 16 இல் செவிமடுக்கப்படும்

 

டிஎபி எம். மனோகரனின் தேர்தல் மனுவை தள்ளுபடி செய்யக் கோரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜாவின் மனுவை ஆகஸ்ட் 16 இல் செவிமடுக்க தேர்தல் நீதிமன்றம் இன்று கோலாலம்பூரில் முடிவு செய்தது.

இத்தேதியை நீதிபதி அஸிஸா நவாவி நிர்ணயித்தார்.

கேமரன் மலை தேர்தல் முடிவை இரத்து செய்யக் கோரும் தேர்தல் மனுவை ஜூன் 5 இல் மனோகரன் தாக்கல் செய்தார்.

கேமரன் மலை தேர்தலில் வெற்றி பெற்ற மஇகாவின் சி. சிவராஜா அத்தொகுதி வாக்காளர்களுக்கு, குறிப்பாக அத்தொகுதியில் 20 விழுக்காடு வாக்காளர்களாக இருக்கும் ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கு இலஞ்சம் கொடுத்ததோடு அவர்களை மிரட்டியுள்ளதாக மனோகரன் கூறுக்கொள்கிறார்.

சிவராஜாவும் ஜெலாய் சட்டமன்ற உறுப்பினர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும் அத்தொகுதி வாக்காளர்களுக்கு “டூய்ட் ரோகோக்” கொடுத்தார்கள் என்றும் அதன் விளைவாக மே 9 பொதுத் தேர்தலில் தாம் 597 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக மனோகரன் கூறுகிறார்.

2016 ஆம் ஆண்டிலிருந்து அங்கு தொகுதி சேவையில் ஈடுபட்டிருந்த தாம் பல ஓராங் அஸ்லிகளின் வாக்குகளைப் பெற முடியாமல் போய் விட்டது என்று மனோகரன் அவரது 161-பக்க மனுவில் கூறியுள்ளார்.