தம்முடைய அதிகாரத்திற்குட்பட்ட ஓர் இலாகா 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு வெளிநாட்டின் தலையீட்டை கோரி இருப்பது தமக்குத் தெரியாது என்று கூறும் நஜிப் அப்துல் ரசாக் “மலேசிய வரலாற்றில் மிக மோசமான பிரதம மந்திரி” ஆவார் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
இந்த விவகாரம் பற்றிய “மிகத் திருப்திகரமற்ற மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத” மறுத்தலுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிட் சியாங் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறார்.
இன்று முன்னேரத்தில், பிரதமர் துறையின் ஆய்வுப் பகுதி தலைமை இயக்குனர் ஹசானா அப்துல் ஹமிட் அப்போதைய சிஐஎ இயக்குனர் ஜீனா ஹேஸ்பெல்க்கு மே மாத தேதி இடப்பட்ட கடிதம் எழுதி இருந்ததாக மலேசியாகினி தெரிவித்திருந்த தகவலை நஜிப் மறுத்திருந்ததை கிட் சியாங் குறிப்பிட்டார்.
மே 4 ஆம் தேதி இடப்பட்ட அக்கடிதத்தில் பிஎன் சாதாரண பெரும்பான்மை அல்லது ஓர் இருக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட நஜிப் நிருவாகத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மூன்று பக்க கடிதத்தில் நஜிப் ஒரு முற்போக்கான தலைவர் என்றும் அவர் அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர் என்றும் வர்ணிக்கப்பட்டிருந்ததோடு, பிரதமர் மகாதிர் மேற்கத்திய நாடுகளின் ஒரு எதிர்ப்பாளர் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு நஜிப் அளித்த பதில் தமக்கு அக்கடிதம் பற்றி எதுவும் தெரியாது என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நஜிப்புக்கு இக்கடிதம் பற்றி உண்மையில் எதுவும் தெரியாது என்றால், “நஜிப் தெளிவாக மலேசிய வரலாற்றில் மிக மோசமான பிரதமர்”, என்று கிட் சியாங் கூறினார்.
எதிர்வரும் திங்கள்கிழமை நஜிப் நாடாளுமன்றத்திற்கு வந்து இந்த அதிர்ச்சியளிக்கும் கடிதம் அனுப்பப்பட்டதை நியாயப்படுத்துவதோடு ஓர் இரகசிய ஒற்றர் துறையை பிரதமர் அலுவலகத்தில் அமைப்பதற்கும் அதற்கான பட்ஜெட்டிற்கும் நாடாளுமன்றம் எப்போது ஒப்புதல் அளித்தது என்பதையும் அவர் விளக்க வேண்டும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.