பலாகோங் சட்டமன்ற உறுப்பினர் ஏடிஇங் தியான் சீ, இன்று அதிகாலை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரின் மறைவு பக்காத்தான் ஹராப்பானுக்கு மாபெரும் இழப்பு.
பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், டிஏபி நடவடிக்கை பிரிவில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவரின் பிரிவு, சிலாங்கூர் மக்கள், குறிப்பாக பலாகோங் பகுதி மக்களை நிச்சயம் கவலைக்குள்ளாக்கும் என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அமீருடின் ஷாரி கூறினார்.
“கடந்த 2013 முதல், ஏடி ங் மிகவும் ஈடுபாட்டுடன் மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். எப்போதும் புன்னகையுடனே இருப்பார், உதவி தேவைபடுபவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்,” என்று மந்திரி பெசார் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“ஏடியின் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு நான் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தச் சோதனையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
நள்ளிரவு 12.30 மணியளவில், கோலாலம்பூரிலிருந்து காஜாங் நோக்கி பயணித்துகொண்டிருந்த போது, கிரேன் சகா நெடுஞ்சாலை, 11.7-வது கி மீட்டரில் அவர் ஓட்டிவந்த நிசான் எக்ஸ்-டிரேல் ஒரு லாரியின் பின்புறம் மோதியதில், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான ஏடி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில், 35,538 வாக்குகள் வித்தியாசத்தில் பலாகோங் சட்டமன்றத் தொகுதியை இரண்டாவது முறையாக ஏடி இங் கைப்பற்றினார்.
- பெர்னாமா