சிஐஎ-க்கு அனுப்பப்பட்ட கடிதம்: கடும் நடவடிக்கை வேண்டும், பேட்ரியட் வலியுறுத்துகிறது

 

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பிரதமர் இலாகா சிஐஎ-க்கு அனுப்பிய கடிதம் ஒரு நம்பிக்கைத் துரோகமான மற்றும் இராசத் துரோகமான செயல் என்று பெர்சத்துவான் பேட்ரியட் கெபங்சாஆன் (பேட்ரியட்) கூறுகிறது.

இச்செயலை இன்றைய அரசாங்கம் உடனடியாக விசாரித்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்ரியட்டின் தலைவர் முகமட் அர்சாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று மலேசியாகினி வெளியிட்டிருந்த பிரதமர் இலாகாவின் ஆய்வுப் பகுதியின் தலைமை இயக்குனர் ஹசானா அப்துல் ஹமிட் சிஐஎ இயக்குனர் ஜீனா ஹாஸ்பெல்லுக்கு மே 4 ஆம் தேதி இடப்பட்ட கடிதத்தில் பிஎன் சாதாரண பெரும்பான்மையில் அல்லது ஒர் இருக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நஜிப் நிருவாகத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு கோரியிருந்த தகவலை முகமட் அர்சாட் குறிப்பிட்டார்.

தமக்கு அக்கடிதம் பற்றி எதுவும் தெரியும் என்பதை நஜிப் மறுத்தார்.

இக்கடிதம் நஜிப்பின் அரசாங்கம் ஒரு பக்கம் இப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு மௌனமான ஆதரவு தெரிவிப்பதையும், மறுபக்கம் அமெரிக்கா இப்பகுதியில் இருப்பதற்கு மலேசியா இரகசியமாக ஆதரவு தெரிவிப்பதையும் காட்டுகிறது என்று அர்சாட் கூறினார்.

நேர்மையற்ற ஒரு தலைவர் மற்றும் ஓர் அரசாங்கம் மட்டுமே இவ்வாறான தாழ்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்று கூறிய அர்சாட், அரசாங்கம் உடனடியாக தீவிர விசாரணையை மேற்கொண்டு குற்றம் புரிந்தவர்களை கடுமையாகத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக அவர் மேலும் கூறினார்.