இன்று பினாங்கில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் மலாய் முஸ்லிம்கள் அரசுசாரா அமைப்புகளின் ஒரு கூட்டத்தினர் இஸ்லாமிய சமய போதகர் ஸக்கீர் நாய்க்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி. இராமசாமிக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர்.
மலாய் உடையும் கருப்பு சொங்கோக்கும் அணிந்திருந்த அக்கூட்டத்தினர் டத்துக் கெராமாட்டில் மஸ்ஜிட் ஜமெக் ஷாயிக் யுசோப்புக்கு வெளியில் பிறை சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் சொற்களை அள்ளி வீசியதுடன் “தங்காப் இராமசாமி” என்றும் குரலெழுப்பினர்.
பெடரேசனின் அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய சமயத்திற்கு மதிப்பு அளிக்குமாறு அவரை வற்புறுத்தினர்.
போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்தனர்.
சால்மன் அலி என்ற ஆர்பாட்டக்காரர் போலீஸ் இராமசாமியை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாளை மாநில யாங் டி-பெர்துவாவுக்கும் மாநில அரசுக்கும் மகஜர்கள் தாக்கல் செய்யப் போவதாக அவர் கூறினார்.
“ஸக்கீர் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தப் போதகருக்கு எதிராக இராமசாமி சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். இராமசாமி ஒரு டிசிஎம் மட்டுமே தவிர அமைச்சரவை மந்திரி அல்ல”, என்று சால்மன் மேலும் கூறினார்.
தாம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் கூட்டத்திரனரை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று இன்று முன்னேரத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இராமசாமி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
கிரிமினல் அச்சுறுத்தலுக்காக தண்டனைச் சட்டத் தொகுப்பின் (பீனல் கோட்) கீழ் இந்த உள்ளூர் கூட்டத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஸக்கீருக்கு எதிராக அவர் கூறியிருந்தவற்றை இராமசாமி தற்காத்துப் பேசினார். இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தேடப்படுபவர்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தின் கீழ் ஸக்கீர் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இராமசாமி கூறினார்.
பணச் சலவை செய்தது உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள ஸக்கீர் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்தியா கோருகிறது. ஆனால், ஸக்கீர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து மொத்தத்தில் இந்துவாக இருக்கும் அரசாங்கத்தின் சதியில் தாம் ஒரு பலியுயிர் என்று கூறிக்கொள்கிறார்.