ஆண்டு இறுதிக்குள் போலீஸ் படையைத் திருத்தி அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் முகம்மட் பூஸி ஹருனை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் த ஸ்டார், மூன்று போலீஸ் சிறப்புக் குழுக்கள்- தீயொழுக்கம், சூதாட்டம், குண்டர்தன- சிறப்புக்குழு, திட்டமிட்டுக் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மீதான சிறப்புக்குழு, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு ஆகியவை- கலைக்கப்படும் என்பதுடன் வேறு சில திருத்தங்களையும் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
“கடலாண்மைக் காவல் அமலாக்கப் பிரிவு உள்துறை அமைச்சின்கீழ்க் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“அது பற்றிய விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கடலோரக் காவல் படையும் மற்ற போலீஸ் பிரிவுகளும் சில இடங்களில் ஒருங்கிணைந்து செயல்படக் கூடும்”, என்று பூஸி இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் கூறியதாக த ஸ்டார் கூறியது.
கிழக்கு சாபா பாதுகாப்புத் தளபத்தியமும்(எஸ்கோம்) திருத்தி அமைக்கப்படலாம் என்று பூஸி கூறினார்.
மேற்சொன்ன அனைத்துமே பரிந்துரைகள்தாம் என்று கூறிய போலீஸ் படைத் தலைவர், திருத்தங்களைச் செய்வதற்கு உள்துறை அமைச்சு, மற்ற அமைப்புகள் ஆகியவற்றின் ஒப்புதல் தேவை என்றார்.