யுஇசி சான்றிதழை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை சான்றிதழை (யுசிசி) அங்கீகரிக்க புத்ரா ஜெயா மேற்கொண்டுள்ள திட்டத்திற்கு கோலாலம்பூரில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

முகநூலில் காமிஸ் (காபுங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் செ-மலேசியா) பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ ஆர்ப்பாட்டக்காரர்கள் “ஹிடுப் ராக்யாட்” மற்றும் “பண்தா யுஇசி” என்று கூச்சலிடுவது தெரிகிறது..

இன்று நாங்கள் இங்கே இருக்கிறோம், நாங்கள் இனவாதிகள் என்பதாலல்ல, ஆனால் நாங்கள் நமது தேசியக் கல்வி அமைவுமுறையை நிலைநிறுத்த விரும்புகிறோம் என்று ஓர் அடையாளம் காணப்படாத பேச்சாளர் கூறினார்.

உத்துசான் மலேசியா தகவல்படி, பங்கேற்றவர்களில் மிகப் பெரும்பாலானோர் யூனிவர்சிட்டி மலாயா, யூனிவர்சிட்டி சயின்ஸ் இஸ்லாம் மலேசியா, யுனிவரிசிட்டி கெபங்சாஆன் மலேசியா மற்றும் யூனிவர்சிட்டி புத்ரா மலேசியா ஆகியவற்றின் மாணவர்கள்.

அவர்களின் ஆர்ப்பாட்டம் மஸ்ஜிட் நெகாராவில் தொடங்கியது. ஆனால் அவர்கள் சோகோவிற்கு அணிவகுத்துச் செல்வதற்கு போலீஸ் தடை விதித்தது.

அந்தக் கூட்டத்தினர் அங்கிருந்து கலைந்து சென்று சோகோவில் பிற்பகல் மணி 3.00 அளவில் மீண்டும் கூடினர். அங்கு அந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் முடிவுற்றது என்று உத்துசான் கூறுகிறது.

“அந்தப் பேரணிக்கான உண்மையான நோக்கம் என்ன என்று போலீஸ் விசாரணை நடத்தும்” என்று டாங் வாங்கி போலீஸ் துணைத் தலைவர் ரூடி அப்துல்லா கூறியதாக அந்த மலாய் நாளிதழ் தெரிவித்தது.

சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு யுசிசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அச்சான்றிதழை உள்ளூர் உயர்நிலைக் கல்வி நிலையங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் சரவாக் மாநிலம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.

பக்கத்தான் ஹரப்பன் அதன் தேர்தல் அறிக்கையில் பொது உயர்நிலைக் கல்வி நிலையங்களில் நுழைவதற்கு யுஇசி பயன்படுத்துவதற்கு உறுதிமொழி அளித்துள்ளது. ஆனால் மனுதாரர்கள் அவர்களின் எஸ்பிஎம் சோதனையில் பகசா மலேசியா பாடத்தில் கிரடிட் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.