ஒருபுறம் நீதிமன்ற வழக்குகள் மறுபுறம் கூட்டரசு அமலாக்கப் பிரிவுகளின் விரிவான விசாரணைகள் இவற்றுக்கிடையிலும் நேரத்தை ஒதுக்கி முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு தம் 65வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அதில் அவரின் குடும்பத்தாரும் 2014-இல் எம்எச்17 விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளின் குடும்பத்தார் சிலரும் கலந்து கொண்டனர்.
கோலாலும்பூர், ஜாலான் லங்காக் டூடாவில் உள்ள அவரது இல்லத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நஜிப் எம்எச் விமான விபத்தையும் நினைவு கூர்ந்தார்.
அவ்விபத்து தொடர்பில் தாம் உரிய பங்கை ஆற்றியிருப்பதாகக் கூறிய அவர், அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
“அதற்கான முயற்சிகளை அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறேன். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்”, என்றவர் கூறினார்.
அவ்விபத்தில் வெடித்துச் சிதறிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இரண்டைப் பெறுவதற்காக உக்ரேன் பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்திய நஜிப் சாமர்த்தியமாக பேசி கருப்புப் பெட்டிகளை பெற்றுத்தந்ததை எதிரணியினரும்கூட அன்று பாராட்டினர்.
விபத்துமீது விசாரணை மேற்கொண்ட டச்சு தலைமையிலான கூட்டுக் குழு, ரஷ்ய எறிபடை ஒன்று விமானத்தைச் சுட்டு வீழ்த்த பயன்பட்டிருக்கிறது என்று கூறியது. அக்குற்றச்சாட்டை ரஷ்யா இன்றளவும் மறுத்து வருகிறது.